கடையநல்லூரில் நூதன முறையில் ஏ.டி.எம். கார்டை திருடி பணம் பறித்த வாலிபர் யார்?- சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை
- செல்வி தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வர இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
- பின்னால் நின்ற நபர் ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தர கூறி உள்ளார்.
கடையநல்லூர்:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சொக்கம்பட்டி கிராமம் கண்ணப்பர் தெருவில் வசிப்பவர் செல்வி. இவர் தனது ஏ.டி.எம். கார்டில் பணம் எடுத்து வருவதற்காக புதிய பஸ் நிலையம் அருகே செயல்பட்டு வரும் ஏ.டி.எம் சென்று வருமாறு தனது அண்ணன் மகன் இசக்கிதுரையை அனுப்பி வைத்தார்.
அங்கு சென்று அவர் பணம் எடுத்தபோது, அவரது பின்னால் நின்ற நபர் அவரது கார்டு ரகசிய எண்ணை தெரிந்து வைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல ஒரு ஏ.டி.எம். கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு கூறி உள்ளார். அப்போது 2 பேரின் கார்டு களும் தவறி கீழே விழுந்ததும், மர்ம நபர் இசக்கிதுரையின் கார்டை மாற்றி எடுத்து விட்டு சென்றுவிட்டார்.
சிறிது நேரத்தில் அந்த கார்டில் இருந்து 2 முறை தலா ரூ.20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த இசக்கி துரை தன்னிடம் இருந்த கார்டை எடுத்து பார்த்தபோது அது ஈரோட்டை சேர்ந்த நபரின் கார்டு என்பது தெரியவந்தது. உடனே வங்கிக்கு சென்று அங்கிருந்தவர்கள் மூலம் கார்டு உரிமையாளருக்கு போன் செய்தபோது, மர்ம நபர் அந்த கார்டின் உரிமையாளரிடம் இருந்து இதேபோல் கார்டை ஏமாற்றி பறித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த நபர் குறித்து கடையநல்லூர் போலீசில் இசக்கிதுரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர். கடையநல்லூர் ஏ.டி.எம். மையத்தில் பதிவாகியுள்ள சி.சி.டி.வி. காட்சிகளை கொண்டு மர்ம நபரை தேடி வருகின்றனர்.