இன்று காலை முதல் சென்னையில் பரவலாக மழை: பல இடங்களில் மின்தடை
- மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது.
- சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
சென்னை:
சென்னையில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேகங்கள் சூழ்ந்து மழை தூறலும் பல பகுதிகளில் காணப்பட்டது. இரவிலும் லேசான மழை பெய்து வந்த நிலையில் சென்னையில் இன்று காலை திடீரென மின்தடை ஏற்பட்டது.
தலைமை செயலகம், எழிலகம், அண்ணாசாலை, எழும்பூர், ஆயிரம் விளக்கு, புரசைவாக்கம் உள்ளிட்ட மத்திய சென்னை பகுதியிலும், வட சென்னை பகுதியிலும் மின் தடை ஏற்பட்டது.
காலை 10 மணி முதல் 11.30 மணி வரை மின்சாரம் தடைப்பட்டதால் அரசு அலுவலகங்கள் சிறிது நேரம் இருளில் மூழ்கின. பின்னர் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு மின் வினியோகம் வழங்கப் பட்டது.
அரசு ஆஸ்பத்திரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறு வனங்களும் இதனால் சிறிது நேரம் பாதிக்கப் பட்டன.
பெரம்பூர், மாதவரம், கொடுங்கையூர், வியாசர் பாடி, தண்டையார் பேட்டை, வண்ணாரப் பேட்டை, மணலி, அண்ணாநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதால் வீடுகளில் வீடுகளில் இருந்து மக்கள் வெளியே வந்தனர்.
எண்ணூரில் இருந்து மணலி துணை மின் நிலையத்திற்கு மின்சாரம் வரக்கூடிய மின் வழித்தடத் தில் ஏற்பட்ட தடை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மணலி துணை மின் நிலையத்தில் இருந்து சென்னையின் முக்கிய பகுதிகளுக்கும் மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. அங்கு வரக்கூடிய மின்சாரம் தடைப்பட்டதால் பெரும் பாலான இடங்களில் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து அதனை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். போர்க்கால வேகத்தில் பழுது சரி பார்க்கப்பட்டதை தொடர்ந்து பகல் 11.30 மணியளவில் படிப்படியாக மின் வினியோகம் சீரானது.