உள்ளூர் செய்திகள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது

Published On 2024-06-27 05:22 GMT   |   Update On 2024-06-27 05:22 GMT
  • வருகிற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.
  • 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்கு கோடைகால வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. இந்த பணி வருகின்ற ஜூலை 1 -ந்தேதி வரை நடைபெற உள்ளது.

உடுமலை அமராவதி வனச்சரகங்கள் மற்றும் வெளிமண்டல பகுதியான கொழுமம், வந்தரவு வசனங்களில் உள்ள 34 சுற்றுகளில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதற்காக வனப்பகுதியில் 53 நேர்கோட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. வன பணியாளர்கள் செல்போன் செயலி மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். கருவி உதவியுடன் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்போது முதல் மூன்று நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் வீதம் மூன்று நாட்களில் 15 கிலோமீட்டர் தூரம் சென்று சுற்றுகளில் காணப்படுகின்ற புலி, சிறுத்தை உள்ளிட்ட மாமிச உண்ணிகள் மற்றும் மிகப்பெரிய தாவர உண்ணிகளின் தடயங்கள் குறித்து பதிவு செய்யப்படும்.

அடுத்த மூன்று நாட்களில் நேர்கோட்டுப் பாதையில் நடந்து சென்று நேரடியாக காணப்படும் வனவிலங்குகளின் காலடிகுளம்பினங்கள், பறவைகள், மனிதர்கள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் ஆகியவை குறித்து பதிவு செய்யப்படும். அதே பாதையில் திரும்பி வரும்போது ஒவ்வொரு 400 மீட்டரிலும் உள்ள தாவர வகைகளும் கணக்கீடு செய்யப்பட உள்ளது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags:    

Similar News