சிட்கோ கணேசபுரத்துக்கு காலை, மாலை நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுமா? - மக்கள் எதிர்பார்ப்பு
- காலை 8 மணி முதல் 9 மணி வரை இயக்கினால் பள்ளி- கல்லூரி மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கோரிக்கை
- பரபரப்பான நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க அறிவுறுத்தல்
குனியமுத்தூர்,
கோவை சுந்தராபுரம் அடுத்த சிட்கோ மற்றும் கணேசபுரம், சீனிவாசநகர், அண்ணாபுரம், கார்மல் கார்டன், மேட்டூர் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான குடியிருப்பு பகுதி உள்ளன.
இங்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அனைவருமே வேலைக்காக கோவை டவுன் பகுதிக்கு சென்றுவர வேண்டிய நிலையில் உள்ளனர்.
சிட்கோ உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஊரடங்கு காலகட்டத்திற்கு முன்பு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. பின்னர் அந்த வழித்தடத்தில் பஸ் இயக்கப்படவில்லை.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் குடியிருப்புவாசிகள் மனு கொடுத்தனர். தொடர்ந்து அந்த பகுதிகளில் தற்போது பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதிக்கு தினமும் 2 பஸ்கள் மட்டுமே வந்து செல்கிறது. ஆனால் பரபரப்பான நேரங்களில் காலை- மாலை வேளைகளில் பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. மேலும் காலை 11 மணிக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது.
இதனை காலை 8 மணி முதல் 9 மணி வரை இயக்கினால் பள்ளி- கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும் வசதியாக இருக்கும்.
பரபரப்பான நேரத்தில் பஸ்கள் இயங்காததால் நாங்கள் வெகுதூரம் நடந்து பொள்ளாச்சி மெயின் ரோட்டுக்கு செல்ல வேண்டி உள்ளது.
மேலும் குறுக்குவழியாக கணேசபுரம் ெரயில்வே தரைப்பாலம் பகுதிக்கு வந்தால் அங்கு மின்விளக்கு வசதிகள் இல்லை. ஆங்காங்கே இருட்டு நிறைந்து காணப்படுவதால் தனியாக நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.
ஏற்கனவே அந்த பகுதியில் தனியாக நடந்து வரும் பெண்களிடம் செயின் பறிப்பும், கத்திக்குத்து சம்பவங்களும் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே எங்கள் பகுதிக்கு வரும் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். பரபரப்பான நேரங்களில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே வேலைக்கு செல்லும் பெண்கள் மனஉளைச்சல் இன்றி வெளியே சென்று வர முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.