உள்ளூர் செய்திகள்

டவுன் காட்சி மண்டபத்தில் தாழ்வாக உள்ள இரும்பு தடுப்பு.

டவுன் காட்சி மண்டபத்தில் இரும்பு தடுப்பு உயர்த்தப்படுமா? - பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published On 2023-02-15 09:29 GMT   |   Update On 2023-02-15 09:29 GMT
  • நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது.
  • பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன.

நெல்லை:

நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் இருந்து வழுக்கோடைக்கு செல்லும் வழியில் காட்சி மண்டபம் உள்ளது. நெல்லையப்பர் கோவிலில் நடைபெறும் திருவிழாக் களின்போது இந்த காட்சி மண்டபத்தில் பல்வேறு விழாக்கள் நடைபெறும்.

காட்சி மண்டபத்தில் தடுப்பு

பழமை வாய்ந்த இந்த காட்சி மண்டபம் வழியாக இருசக்கர வாகனங்கள் மட்டுமல்லாமல் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வந்தன. சில நேரங்களில் கனரக வாகனங்கள் சரக்குடன் செல்லும்போது காட்சி மண்டபத்தில் உள்ள தூண்களில் உரசியதால் அவை சேதம் அடைந்தன.

எனவே பழமை வாய்ந்த காட்சி மண்டபம் சேதம் அடைவதை தவிர்க்க கனரக மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லமுடியாத வகையில் இரும்பினால் ஆன தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த தடுப்பு, உயரம் குறைவாக வைக்கப்பட்டுள்ளதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களின் தலையை பதம் பார்க்கும் நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறி வருகின்றனர்.

விபத்து அபாயம்

ேமாட்டார் சைக்கிள்கள் ஒன்றன்பின் ஒன்றாக செல்லும் போதும், வாலிபர்கள் அதிவேகத்தில் மோட்டார் சைக்கிளில் வரும்போதும் இந்த இரும்பு தடுப்பில் மோதி விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே அந்த இரும்பு தடுப்பை எடுத்து சற்று உயரத்தில் வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாழ்வாக உள்ளதால் நடந்து செல்பவர்கள் கூட சற்று உயரமானவர்களாக இருந்தால் அவர்களது தலையையும் இரும்பு தகடு பதம்பார்த்துவிடும் என்று நெல்லை மாவட்ட பொதுஜன பொதுநல சங்க தலைவர் அய்யூப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

Tags:    

Similar News