உள்ளூர் செய்திகள்

துணைவேந்தர் நியமனத்தில் கவர்னர் தலையிடுவதா? செல்வப்பெருந்தகை கண்டனம்

Published On 2024-08-09 07:54 GMT   |   Update On 2024-08-09 07:54 GMT
  • பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.
  • தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும்.

சென்னை:

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களில் துணை வேந்தர் நியமனங்களில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறது. ஆளுநர்களுக்கும், மாநில அரசுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் சென்னை பல்கலைக் கழகத்திற்கு கடந்த ஓராண்டு காலமாக துணை வேந்தர் பதவி நியமிக்க முடியாமல் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

இதனால், 55,000 கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் கடந்த ஏப்ரல் 2023 இல் தேர்வான பிறகு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் காத்துக் கொண்டிருக்கிற அவல நிலை உள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க மூன்று உறுப்பினர் தேடுதல் குழுவை மாநில அரசு நியமித்தது. அதற்கு போட்டியாக தமிழக ஆளுநர் நான்கு உறுப்பினர் கொண்ட தேடுதல் குழுவை நியமித்திருக்கிறார்.

இந்நிலையில் தமிழக ஆளுநரின் சட்டவிரோத போக்கு காரணமாக சென்னை பல்கலைக் கழக நிர்வாகம் செயல்படாமல் முடக்கப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியாக எடுக்க வேண்டிய முடிவுகள், பொருளாதார பிரச்சினைகள், ஆராய்ச்சி குறித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் பல்கலைக் கழக நிர்வாகம் செயல்பட முடியவில்லை.

இந்நிலையில் பாரதியார், சென்னை மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்காக மூன்று பேர் அடங்கிய தேடுதல் குழுவை அமைத்து தமிழக அரசு அறிவிப்பாணைகளை வெளியிட்டது.

இதற்கு போட்டியாக ஆளுநர் ஆர்.என். ரவி இதற்காக தனி தேடுதல் குழுவை அமைத்து அறிவிப்பாணைகளை வெளியிட்டுள்ளார்.

இத்தகைய மோதல் போக்கு காரணமாக துணை வேந்தர் நியமனம், பல்கலைக் கழக நிர்வாகம் ஆகிய விவகாரங்களில் கவர்னருக்கும், மாநில அரசுக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது.

எனவே, சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட தமிழக பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் தமிழக ஆளுநர் முட்டுக்கட்டை போட்டு வருவதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக செயல்பட்டு பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்குலைக்கிற ஆளுநர், மேற்கு வங்கம் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி துணை வேந்தர்கள் நியமனத்தில் தலையிடுவதை உடனடியாக நிறுத்திக் கொண்டு பல்கலைக் கழக துணை வேந்தர் நியமனத்திற்கு தமிழக அரசோடு இணங்கி பணியாற்ற தமிழக ஆளுநர் முன்வர வேண்டும். அப்படி இல்லையெனில் அதற்கான விளைவுகளை மேற்கு வங்க ஆளுநர் சந்தித்ததைப் போல தமிழக கவர்னரும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News