பழங்குடியின பெண் சாவில் திடீர் திருப்பம்
- ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள தேவராஜ பாளையம் அருகே கருமாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். விவசாயி.
இவரது மகன் கோவிந்தராஜ் (வயது 27). டிரைவரான இவர் கனரக வாகனம் ஓட்டி வந்தார்.
இவர் அதேபகுதியில் உள்ள போதக்காடு பழங்குடியினத்தைச் சேர்ந்த புகழேந்தியின் மகள் ஆர்த்தி (24) என்பவரை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள். ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வீட்டில் ஆர்த்தி பிணமாக இறந்து கிடந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்த்தியின் உறவினர்கள் வீட்டில் வந்து பார்த்தபோது கணவன் கோவிந்தராஜ், மாமனரும், வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
தகவல் அறிந்து வந்த அரூர் போலீசார் மற்றும் தடய அறிவியல் துறையினர் பிணமாக கிடந்த ஆர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே இறந்து போன ஆர்த்தியின் உறவினர்கள் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்த்தியை கொன்றவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறி இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அரூர் டி.எஸ்.பி. ஜெகநாதன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து தலைமறைவாக இருந்த கணவர் கோவிந்தராஜை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்த்தியை கொன்றதை அவரது கணவர் கோவிந்தராஜ் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் இந்த சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்து ஆர்த்தியின் கணவர் கோவிந்தராஜை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.
போதக்காடு பகுதியைச் சேர்ந்த புகழேந்தியின் மூத்த மகளான ஆர்த்தி பள்ளியில் படிக்கும் போது தன்னுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. எங்களது காதல் விவகாரம் அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இந்த நிலையில் நானும், ஆர்த்தியும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டேன். இந்த நிலையில் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது. சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தோம்.
இதற்கிடையே ஆர்த்தி பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டதை அரசு சார்பில் கலப்பு திருமணம் நிதிஉதவி கிடைப்பதற்காக விண்ணப்பித்து இருந்தோம். அந்த பணம் அவருக்கு கிடைத்தது.
மேலும், தனக்கு பணம் தேவைப்பட்டதால், ஆர்த்தியிடம் அவரது வீட்டில் வரதட்சணை பணம் வாங்கி வருமாறு கூறினேன். இதற்கிடையே கலப்பு திருமணம் நிதிஉதவி பணம் ஆர்த்திக்கு வந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டேன். சம்பவத்தன்று மீண்டும் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது மனைவி ஆர்த்தியை சரமாரியாக தாக்கினேன். இதில் ஆத்திரம் தீராத நான் அவரை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் எனது மூத்த மகளை மட்டும் என்னுடன் அழைத்து சென்றுவிட்டேன். எனது மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆர்த்தியின் உறவினர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், என்னை விசாரிக்க போலீசார் தேடியபோது சிக்கி கொண்டேன்.
இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.
திருமணமாகி 7 வருடங்கள் ஆனநிலையில் ஆர்த்தி இறந்த சம்பவம் குறித்து பிடிப்பட்ட கோவிந்தராஜிடம் விசாரணை நடத்த அரூர் ஆர்.டி.ஓ. வில்சன் ராஜசேகர் முன்னிலையில் இன்று போலீசார் ஆஜர்ப டுத்தி சிறையில் அடைக்க உள்ளனர். இந்த சம்பவம் ஆர்த்தியின் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.