உள்ளூர் செய்திகள் (District)

கைதான சதீஸ்குமார் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பைக்.

கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்த முயன்ற வாலிபர் கைது 22 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்

Published On 2023-11-13 05:34 GMT   |   Update On 2023-11-13 05:34 GMT
  • கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.
  • அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர்.

கம்பம்:

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கஞ்சா பயிர் செய்து வந்த நிலையில், கஞ்சா வளர்ப்பை தமிழக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் தற்போது கஞ்சா வளர்ப்பு முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஆந்திரா மாநிலத்தில் இருந்து கஞ்சா வியாபாரிகள் கஞ்சாவை ரயில், பஸ், லாரி, கார், மோட்டார் சைக்கிளில் நூதன முறையில் கடத்தி வந்து கேரளாவிற்கு விற்பனை செய்து வருகின்றனர். கேரளாவில் மலைப்பகுதிகள் அதிகம் இருந்தாலும், கேரளா வனம் மற்றும் போலீசார் கெடுபிடியால் கஞ்சா வளர்ப்பு என்பது அதிகமாக இல்லை.

மேலும் கேரளாவில் போதை பொருட்களான புகையிலை, பான் மசாலா, போதை மாத்திரை உள்ளிட்ட பொருட்கள் 100 சதவீதம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மதுபாட்டில்கள் விலையும் அதிகம். குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அரசு விற்பனை செய்வதால் பெரும்பாலான இளைஞர்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கஞ்சாவை போதைக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

கேரளாவில் இளைஞர்களின் கஞ்சா பயன்பாடு, கஞ்சாவிற்கான கிராக்கியை தெரிந்து கொண்ட தமிழகத்தில் உள்ள கஞ்சா வியாபாரிகள் கேரள இளைஞர்களை குறி வைத்தும் சமூக வலைதளங்களில் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வருகின்றனர். இது குறித்து தகவலறிந்த தமிழக அரசு தமிழகத்தில் கஞ்சா கடத்தல், விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது குண்டாஸ், சொத்து முடக்கம் என அதிரடி நடவடிக்கை மேற்கொண்டதால் கஞ்சா கடத்தலை தவிர்த்து வந்த வியாபாரிகள், மாற்று தொழிலுக்கு மாறியுள்ளனர். அதேசமயம் ஒரு சில வியபாரிகள் தொடர்ந்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கம்பம் வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் அதிரடி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

கம்பம் 18ம் கால்வாய் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சாக்குபையுடன் வந்த வாலிபர் போலீசாரை கண்டதும் அதிவேகமாக சென்றார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த வாலிபரை சினிமா பட பாணியில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் சாக்குபையை சோதனை மேற்கொண்டபோது அதில் 22 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கம்பம் குரங்குமாயன் தெருவைச் சேர்ந்த சதீஸ்வரன் (வயது 26) என்பதும் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை விலைக்கு வாங்கி கேரளா மாநிலத்தில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News