மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபர் கைது
- 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் கொங்குமெயின் ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் பார் அருகே சுதந்திர தினமான நேற்று மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி உத்தரவின் பேரில் கொங்கு நகர் சரக உதவி கமிஷனர் அனில் குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் நுண்ணறிவு பிரிவு போலீஸ்காரர் நல்லதம்பி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
போலீசார் சோதனையில் மதுபான கடையில் 500 மது பாட்டில்களும் அருகாமையில் உள்ள அறை ஒன்றில் 1000 மதுபாட்டில்களும் கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து 1500 மது பாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் (வயது 26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.