இளைஞர்கள் கொள்கை பிடிப்புடன் கட்சிக்கு வாருங்கள்- துரைமுருகன்
- நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர்.
- துரைமுருகன் மீண்டும் இளைஞர்களுக்கு அழைப்பு.
சென்னை:
அமைச்சர் உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்க வேண்டும் என்ற கோரிக்கை தி.மு.க.வில் வலுத்து வருகிறது. எந்த நேரமும் இதற்கான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூத்த அமைச்சர் துரைமுருகன் இருக்கும் நிலையில் இளைஞர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்று இளைஞர் அணி நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஏற்கனவே பேசி இருக்கிறார்.
அண்மையில் கலைவானர் அரங்கில் நடைபெற்ற விழாவில் ரஜினிகாந்தும் இதே கருத்தை வலியுறுத்தும் வகையில் பேசியதால் அவரை துரைமுருகன் வார்த்தைகளால் வறுத்தெடுத்தார். அதன்பிறகு இருவரும் பரஸ்பரம் சமாதானம் அடைந்துவிட்டனர்.
இதன்பிறகு தனது தொகுதியில் பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில் இளைஞர்கள் வந்தால் வரவேற்பதாக தெரிவித்தார். ஆனாலும் கட்சிக்காக உழைத்து பாடுபட்ட மூத்தவர்களின் உழைப்பையும், தியாகத்தை யும் சிறைக்கு சென்றதையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார்.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற தி.மு.க. பவள விழா, முப்பெரும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றிருந்த நிலையில் மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக மாலை 5.17 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது:-
இன்று நிறைய இளைஞர்கள், படித்தவர்கள் திமுக பக்கம் திரும்பியுள்ளனர். அவர்களை எல்லாம் நான் வரவேற்கிறேன். காரணம் இளைஞர்கள் வந்தால் தான் இந்த கட்சியை நடத்துவதற்கு வாய்ப்பு ஏற்படும். ஆனால், இளைஞர்கள் இயக்கத்துக்கு வரும்போது, கட்சியில் நிலைக்க மன உறுதி வேண்டும்.
மன உறுதி எப்போது வரும் என்றால், நாம் ஏற்றுக் கொண்டுள்ள கொள்கை உண்மையானது. இந்த கொள்கைக்காக உழைக்கலாம், தியாகம் செய்யலாம் என்ற எண்ணம் உங்களுக்கு வரும். ஆகவே கொள்கையின் அடிப்படையில்தான் இந்த இயக்கத்துக்கு நீங்கள் வரவேண்டும். இந்த கட்சிக்கு நீண்ட வரலாறு உண்டு.
அந்த வரலாற்றையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள். தியாகம் புரிய வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி, "தன்னால் கட்சிக்கு என்ன லாபம் என்று கருதுகிறவன் கட்சியின் ரத்த நாளத்தை போன்றவன், கட்சியால் எனக்கு என்ன லாபம் என்று எண்ணுபவன் கட்சியில் வளரும் புற்றுநோய்க்கு சமமானவன்" என்று கூறியுள்ளார். வரும் நண்பர்களை எல்லாம் மனமார வரவேற்கிறேன்.
எங்களுக்குப்பிறகு இந்த கட்சியை நீ்ங்கள்தான் கட்டிக்காக்க வேண்டும். எனவே, கொள்கை, உறுதியோடு, மனதிடத்துடன், தியாகத்துடன் எந்த நிலைக்கும் தயார் என்று நினைத்து, வரலாறுகளை படித்துவிட்டு வாருங்கள்.
இது மேனாமினுக்கி கட்சியல்ல, அடித்தளத்தில் உள்ள ஏழை எளியவர்கள், பாட்டாளி தோழர்கள், நெசவாளர்கள் இப்படிப்பட்ட சமுதாயத்துக்காக உழைக்கும் கட்சி. அதையும் மனதில் இருத்திக் கொள்ளுங்கள்".
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில்தான் பவள விழா மற்றும் முப்பெரும் விழாவில் மு.க.ஸ்டாலின் விருது பெற்ற எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், "தி.மு.க.வின் வைரவிழா ஆண்டை கொண்டாடவும், எங்களை வழிநடத்தவும் நீங்கள் ஒருவரை அடையாளம் காட்ட வேண்டும்.
உங்களுக்கும், மேடையில் உள்ள தலைவர்களுக்கும் ஏன் இன்னும் தயக்கம். உதயநிதியை துணை முதல்வராக்க வேண்டாமா? பேராசிரியரைவிட பெரிய தலைவர் யாரும் இல்லை. பேராசிரியர் பெரிய மனதுடன் தலைவரை துணை முதல்வராக அன்று ஏற்றுக் கொண்டார். நாங்களும் ஏற்றுக் கொள்வோம். காலம் தாழ்த்தாதீர்கள்?" என்று பேசினார்.
இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.