மகளிர் உரிமை திட்டத்திற்கு ஜீரோ பேலன்சில் கணக்கு - மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு
- வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- மத்திய கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
திண்டுக்கல்:
தமிழகம் முழுவதும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. இதற்காக தற்போது வீடுகள் தோறும் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள மகளிர் வங்கி கணக்கில் மாதம் ரூ.1000 செலுத்தும் வகையில் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
வங்கி கணக்கு இல்லாத மகளிருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கு முதல்கட்ட விண்ணப்பம் பதிவு செய்யும் முகாம்கள் வருகிற 24-ந்தேதி தொடங்கி ஆகஸ்டு 4-ந்தேதி வரை அந்தந்த ரேசன்கடைகளில் நடைபெறும்.
அவ்வாறு வழங்கப்பட்ட விண்ணப்பங்களுடன் ஆதார், ரேசன், மின்கட்டண அட்டைகளுடன் வங்கி கணக்கு புத்தகம் அவசியமாகிறது. வங்கி கணக்கு இல்லாதவர்களுக்கு என்.ஜி.ஓ.காலனி மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம், அந்தந்த பகுதி கூட்டுறவு வங்கி கிளை களிலும் ஜீரோ பேலன்சில் சேமிப்பு கணக்கு தொடங்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
இதற்காக 2 பாஸ்போர்ட்டு சைஸ் போட்டோ, ஆதார், ரேசன், வாக்காளர் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பித்து வங்கி கணக்கு தொடங்கலாம் என்றார்.