10ம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாதா...? வலைத்தளங்களில் வைரலாகும் செய்தி
- பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு ஆய்வு செய்தது.
- மத்திய கல்வி அமைச்சகம் அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்விக் கொள்கையின்படி, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது என சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வைரலாகி வருகிறது.
'புதிய கல்விக் கொள்கைக்கு சில மாற்றங்களுடன் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய மாற்றங்களின்படி, இனி 10ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் இல்லை, எம்ஃபில் படிப்பு நிறுத்தப்படும், 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகள் மட்டுமே நடைபெறும்' என அந்த வாட்ஸ்அப் செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தி பலமுறை அனுப்பப்பட்டதாகவும் தெரியவந்தது.
இந்தச் செய்தியின் உண்மைத்தன்மை குறித்து, பத்திரிகை தகவல் மையத்தின் உண்மை சரிபார்ப்பு பிரிவு (PIB Fact Check) ஆய்வு செய்தது. அதன் முடிவுகளை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில், 10வது வகுப்பு பொதுத்தேர்வு இனி கிடையாது எனக் கூறும் வாட்ஸ்அப்பில் பரவும் செய்தி போலியானது என்றும், இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.