கதம்பம்

சந்கேம் தீர்ந்தது..

Published On 2024-08-14 11:28 GMT   |   Update On 2024-08-14 11:28 GMT
  • தெய்வப்புலவர் கூற்றில் தவறு இருக்க நியாயம் இல்லை.
  • பல நாட்கள் என்னுள் இருந்த சுமையை இன்று போக்கினீர்கள்” என்று அகமகிழ்ந்து கூறுகிறார்.

ஒருமுறை பதின்கவனகர் திருக்குறள் பெ.இராமையா அவர்களை மகரிஷி அவர்கள் சந்திக்க நேர்ந்தது.

புலால் மறுத்தல் அதிகாரத்தில் ஒரு குறளில் ரொம்ப நாட்களாக எனக்கு ஒரு சந்தேகம் உள்ளது என்கிறாா் இராமையா.

சொல்லுங்கள் எனக்குத் தெரிந்தால் சொல்கிறேன் என்கிறாா் மகரிஷி.

சுவாமி "கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிரும் கை கூப்பி தொழும்" என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.

விலங்குகளுக்குக் கைகள் கிடையாது. அவ்வாறு இருக்கையில் எல்லா உயிரும் கைகூப்பித் தொழும் என்கிறாரே. இது எவ்வாறு சாத்தியம்?

தெய்வப்புலவர் கூற்றில் தவறு இருக்க நியாயம் இல்லை. இதுதான் எனக்கு சந்தேகம் என்கிறார்.

அய்யா, இதை ஏற்கனவே நான் சிந்தித்துள்ளேன். வள்ளுவரின் கூற்றில் தவறில்லை.

தாங்கள் கைகூப்பி, என்ற வார்த்தையை புலால் மறுத்தானை என்ற வார்த்தைக்கு முன் போட்டுப் பொருள் கொண்டு பாருங்கள்..

"கொல்லான் கைக்கூப்பி புலால் மறுத்தானை

எல்லா உயிரும் தொழும்"

ஒருவர் மற்றவரைப் புலால் உண்ண வற்புறுத்தி அழைக்கிறார்.

அதை மறுப்பவர் தன் உறுதிப்பாட்டை வெளிப்படுத்த இரு கரங்களையும் குவித்து, "ஐயா நான் புலால் உண்ண மாட்டேன். என்னை விட்டுவிடுங்கள்" என வேண்டுகிறார்.

இவ்வாறு செய்பவரை இதற்கு மேல் யாரும் வற்புறுத்த முடியாதல்லவா?

புலால் மறுத்தலில் இத்தகைய உறுதிப்பாட்டை உடையவர்களுக்கு உயிர்கள் மீது இயற்கையில் அன்பு செலுத்தும் தன்மையும் வந்துவிடும்.

அவ்வாறு உயிர்கள் மீது அன்பு செலுத்துபவரை எல்லா உயிர்களும் நேசிக்கும் அல்லவா?

இவ்விளக்கத்தைக் கேட்ட இராமையா அவர்கள்"ஆமாம் சுவாமி.. இது தான் அக்குறளுக்கு மிகச்சரியான பொருளாக இருக்க வேண்டும். பல நாட்கள் என்னுள் இருந்த சுமையை இன்று போக்கினீர்கள்" என்று அகமகிழ்ந்து கூறுகிறார்.

-எச்.கே. சாம்

Tags:    

Similar News