கதம்பம்
null

தூக்கணாம் குருவியும் குரங்கும்

Published On 2024-07-23 05:57 GMT   |   Update On 2024-07-23 06:00 GMT
  • தூக்கணம் குருவியின் கூடு, சுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும்.
  • மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணம் குருவி தனது கூட்டில் இருந்தது.

குருவி வகைகளுள் ஒன்று தூக்கணாங்குருவி. மரங்களில் தொங்கும் வடிவில் கூடுகளைக் கட்டி வாழ்வதால், இந்தக் குருவி வகைக்கு, "தூக்கணம் குருவி" என்று பெயர் .

பயிர்களின் இலைநரம்புகள் நார்கள் இவற்றைக் கொண்டு இக்குருவி பிண்ணும் தொங்கு கூடுகள் பார்வைக்கு அழகாகவும், அதிசயமாகவும் இருக்கும். தூக்கணாம் குருவியின் கூடு, சுரைக்காயின் வடிவத்தில் தொங்கியபடி இருக்கும்.

கூட்டின் வாயிலானது மழைநீர் உள்ளே புகாதபடி கீழ்ப்புறமாக இருக்கும். தாய்க் குருவியானது, காட்டில் பறக்கும் மின்மினிப் பூச்சிகளைப் பிடித்துக் கொண்டு வந்து, களிமண் சேற்றில் புதைத்து, அதைக் கொண்டு வந்து தனது கூட்டில் வெளிச்சத்திற்குப் பயன்படுத்தும் என்பர் .

தூக்கணாம் குருவி ஒன்று அழகாகக் கூடு கட்டி வாழும் காலத்தில், நல்ல மழை பொழிந்தது. மழையில் நனையாதபடி பாதுககாப்பாக தூக்கணாம் குருவி தனது கூட்டில் இருந்தது.

அந்த மரத்தில் பலகாலமாக இருந்து வந்த ஒரு குரங்கு மழையில் நனைவதைப் பார்த்த தூக்கணாம் குருவியின் மனம் பொறுக்கவில்லை.

குரங்கின் மீது வைத்த இரக்கத்தால் "இந்த மழையில் நனையாது இருக்க நீயும் என்னைப் போல் ஒரு கூடு கட்டிக் கொள்ளலாமே" என்று தனக்குத் தெரிந்த உபாயத்தைத் தூக்கணாம் குருவி கூறியது.

அதனைக் கேட்ட அறிவில்லாத அந்தக் குரங்கு, "எனக்கு நீ அறிவுரை கூறுகின்றாயா?" என்று கோபம் கொண்டு, தான் இருந்த இடத்தில் இருந்து பாய்ந்து, அந்த குருவியானது அழகாகக் கட்டி வைத்திருந்த கூட்டினைப் பிய்த்து எறிந்தது.

தனது அறிவுக் கூர்மையால் முயன்று, தனது பாதுகாப்புக்காகக் கட்டி இருந்த கூடு சிதைந்து போனது பற்றி குருவி வருந்தியது.

தனது வீரத்தைக் காட்டி விட்டதாக எண்ணி குரங்கு மகிழ்ந்தது.

இந்த கதையால் நாம் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால், அறிவுள்ளவர்கள், அறிவு இல்லாதவர்களுக்கு அறிவுரை சொன்னால், சொன்னவர்க்கே துன்பம் விளையும் என்பதுதான்.

"விவேக சிந்தாமணி" என்று ஒரு பழைய நீதிநூல் உண்டு. இந்த நூலில், மேற்குறித்த நீதியானது,பின்வரும் பாடலாகக் காட்டப்பட்டு உள்ளது.

வானரம் மழைதனில் நனையத் தூக்கணம்

தான் ஒரு நெறிசொலத் தாண்டி பிய்த்திடும்;

ஞானமும் கல்வியும் நவின்ற நூல்களும்

ஈனருக்கு உரைத்திடில் இடர்அது ஆகுமே!

-திருநாவுக்கரசு

Tags:    

Similar News