இந்தியா

தபால் ஓட்டு போட மறுப்பு: 112 வயதிலும் ஜனநாயக கடமையாற்ற காத்திருக்கும் மூதாட்டி

Published On 2024-04-23 04:43 GMT   |   Update On 2024-04-23 05:21 GMT
  • காஞ்சன்பென் பாட்ஷா தனது பேரன்களுடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.
  • காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார்.

மும்பை:

பாராளுமன்றத் தேர்தல் கடந்த 19-ந்தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடந்து வருகிறது. வாக்காளர்கள் வாக்களிக்க இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து வருகிறது. 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காஞ்சன்பென் பாட்ஷா என்ற 112 வயது மூதாட்டி ஒருவர் தபால் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்றும் நேரடியாக வந்து ஓட்டு போட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

1912-ம் ஆண்டு பிறந்த காஞ்சன்பென் பாட்ஷாவுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். கணவர் இளம் வயதிலேயே இறந்து விட்டார். தற்போது அவர் இப்போது தனது 2 பேரன்களான பரிந்த் மற்றும் ஜிக்னேஷ் ஆகியோருடன் தெற்கு மும்பையின் பிரீச் கேண்டி பகுதியில் வசித்து வருகிறார்.

மும்பையில் மே 20-ந்தேதி நடைபெற உள்ள வாக்குப்பதிவையொட்டி தற்போது 85 வயதுக்கு மேற்பட்டவர்கள் வசிக்கும் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் காஞ்சன்பென் பாட்ஷா வீட்டில் இருந்தே வாக்களிக்க மறுத்து விட்டார். வயதாகிவிட்டாலும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கப் போவதாக அவர் தெரிவித்தார். இந்த கால இளைஞர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரியை அமைத்துள்ளார்.

வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்ற அவரது அர்ப்பணிப்பால் ஈர்க்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் நோடல் அதிகாரி மற்றும் அவரது குழுவினர் காஞ்சன்பென்னைப் பாராட்டி அவரை கவுரவித்தனர்.

சுதந்திர போராட்டம், பிரிவினை, உலகப் போர்கள் மற்றும் பல வரலாற்று நிகழ்வுகளைக்கண்ட அவர், இப்போது ஜனநாயக செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருக்க இளைஞர்களை வலியுறுத்துகிறார்.

நாட்டை முன்னேற்ற இளைஞர்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

காஞ்சன்பென் குறித்து அவரது பேரன் பரிந்த் கூறியதாவது:-

இந்த வயதில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்வது மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக அவர் நம்புகிறார். வீட்டில் இருந்து வாக்களிப்பது யாருக்கும் பயனளிக்காது என்று கூறி நேரடியாக வாக்குச்சாவடிக்குச் செல்வதையே அவர் விரும்புகிறார். இந்த வயதிலும் வெளியே சென்று வாக்களிக்கும்போது அதை பார்க்கும் மற்றவர்களும் வாக்களிக்க நினைப்பார்கள். அதுதான் வாக்களிக்க வெளியே செல்வதற்கான அவரது முக்கிய நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News