15-வது ஆண்டு தினம்: மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
- மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
- முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன.
மும்பை:
கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் 10 பேர், மும்பை நகருக்குள் கடல் வழியாக நுழைந்து தாக்குதல் நடத்தினர்.
சத்ரபதி சிவாஜி மஹராஜ் ரயில் நிலையம், ஓபராய் ஓட்டல், தாஜ் மஹால் ஓட்டல், லியோ கபே, காமா மருத்துவமனை, யூதர்கள் சமுதாய மையம் ஆகிய இடங்களில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படைவீரர்கள் 18 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளில் ஒன்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் கசாப் 2012ல் துாக்கிலிடப்பட்டார்.
மும்பை தாக்குதலின் 15-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. மும்பை நகரின் முக்கிய வீதிகளில் வீர மரணம் அடைந்த பாதுகாப்பு படையினரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டன. அதற்கு பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தினர்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் கூறும்போது, மும்பை பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு நன்றியுள்ள தேசம் வலியுடன் நினைவு கூர்கிறது.
துணிச்சலான ஆன்மாக்களின் நினைவைப் போற்றும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் நாங்கள் நிற்கிறோம். தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரம் மிக்க பாது காப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவர்களின் உன்னத தியாகத்தை நினைவுகூர்ந்து, எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான நமது உறுதிமொழியை புதுப்பிப்போம் என்று கூறியுள்ளார்.