இந்தியா

கேரளாவில் தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்த 17 வயது மகள்: கோர்ட்டு அனுமதி அளித்து பாராட்டியது

Published On 2022-12-22 09:47 GMT   |   Update On 2022-12-22 09:47 GMT
  • தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
  • தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை கோர்ட் சுட்டிக்காட்டியது.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சை செய்தால் அவரை காப்பாற்றலாம் என்றனர்.

இதையடுத்து உறுப்பு தானம் பெறுவோர் பட்டியலில் அந்த நபர் பதிவு செய்து காத்திருந்தார். ஆனால் உடனடியாக அவருக்கு கல்லீரல் தானம் கிடைக்கவில்லை. எனவே அவரது 17 வயதே ஆன மகள், தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்தார்.

ஆனால் மருத்துவ சட்டவிதிகளின் படி மைனர் பெண் உறுப்பு தானம் செய்யக்கூடாது. இதனால் டாக்டர்கள், 17 வயது சிறுமியின் உறுப்பை தானமாக பெற மறுத்தனர். இதையடுத்து அந்த சிறுமி, ஐகோர்ட்டில் மனு செய்தார்.

அதில் தனது தந்தையின் உயிரை காப்பாற்ற தனது கல்லீரலை தந்தைக்கு தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரியிருந்தார். சிறுமியின் மனுவை பரீசிலித்த கோர்ட்டு சிறுமி அவரது, தந்தைக்கு கல்லீரல் தானம் செய்ய அனுமதி வழங்கியது.

தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்க சிறுமிக்கு அனுமதி வழங்கிய கோர்ட்டு அவரை பாராட்டவும் செய்தது. தந்தையின் உயிரை காப்பாற்ற சிறுமி நடத்திய சட்ட போராட்டத்தை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மேலும் இதுபோன்ற மகளை பெற அவரது பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் குறிப்பிட்டது.

Tags:    

Similar News