செய்திகள்

மும்பை: கமலா மில் தீவிபத்து - முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது

Published On 2018-01-06 13:10 GMT   |   Update On 2018-01-06 13:10 GMT
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் ஏற்பட்ட கமலா மில் தீவிபத்து தொடர்பாக, முன்னாள் டி.ஜி.பி. மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மும்பை:

மும்பை லோயர் பரேல் சேனாபதி பாபத் மார்க் பகுதியில் கமலா மில் வளாகம் உள்ளது. இங்கு ஓட்டல்கள், மது விடுதிகள், பிரபல தனியார் தொலைக்காட்சி அலுவலகங்கள் உள்பட பல அலுவலகங்கள் அமைந்துள்ளன.

இங்குள்ள 4 மாடி கட்டிடத்தின் மேல் மாடியிலுள்ள ‘ஒன் அபோவ்’ என்ற ஒரு ஓட்டலில் டிசம்பர் மாதம் 28-ம் தேதி நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தீப்பிடித்தது. இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகினர். 55 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக ‘ஒன் அபோவ்’  ஓட்டல் மேலாளர் 2 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.

தீவிபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், ஒன் அபோவ் ஓட்டல் அருகில் உள்ள மோஜோ பிஸ்ட்ரோ என்ற கேளிக்கை விடுதியில் கஞ்சா புகைப்பதில் இருந்து ஏற்பட்ட தீயால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.

இந்நிலையில், தீ விபத்துக்கு காரணமான மோஜோ பிஸ்ட்ரோ உரிமையாளர் யுக் பதக் என்பவரை போலீசார் இன்று கைது செய்தனர். விசாரணையில், அவர் முன்னாள் டி.ஜி.பி. மகன் என்பதும், புனே முன்னாள் போலீஸ் கமிஷனர் கே.கே.பதக் மகன் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே தலைமறைவாக உள்ள ஒன் அபோவ் ஓட்டல் உரிமையாளர்களை பற்றி தகவல் கொடுத்தால் 1 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Similar News