செய்திகள்

விடுதலையான பிறகு யோகா ஆசிரியர்களாக மாறும் 448 சிறைக் கைதிகள்

Published On 2018-06-20 05:06 GMT   |   Update On 2018-06-20 05:06 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் சிறையில் உள்ள 448 சிறைக்கைதிகள் விடுதலையான பிறகு யோகா ஆசிரியர்களாக பணிபுரிய உள்ளதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். #Yoga
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலத்தில் ‌ஷர்னபூர் என்ற இடத்தில் சிறைச்சாலை உள்ளது. இங்கு கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்பு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இங்கு கைதிகளை நல்வழிப்படுத்தும் வகையில் யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. யோகா குரு பாரத்பூ‌ஷன் வழி காட்டுதலின் பேரில் கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

அதற்கான ஏற்பாடுகளை ஜெயில் சூப்பிரண்டு டாக்டர் விரேஷ்ராஜ் சர்மா செய்துள்ளார். கைதிகளுக்கு தினமும் யோகாசன பயிற்சி வகுப்புகளும், செய்முறை விளக்கமும் நடத்தப்படுகிறது.

இதற்கிடையே சிறையில் இருந்து விடுதலை ஆனதும் கைதிகளின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் வகையில் அவர்களை யோகா ஆசிரியர்களாக்க கடும் பயிற்சி அளிக்கப்பட்டது.


அதில் 448 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். விடுதலையானதும் இவர்கள் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணியாற்றுவார்கள்.

இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு டாக்டர் விரேஷ்ராஜ்சர்மா கூறும் போது, “நான் கைதிகளுடன் அவர்களது எதிர்காலம் குறித்து பேசினேன். அவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டும் என விரும்பினேன். எனவே அவர்கள் விரும்பினால் யோகா கற்றுக் கொள்ளும்படி அறிவுறுத்தினேன்.

அதை ஏற்று அவர்களில் 449 பேர் யோகா பயிற்சி மேற்கொண்டனர். தற்போது அவர்கள் யோகா பயிற்சியில் முழு திறமையும் பெற்று விட்டனர். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் யோகா பயிற்சி ஆசிரியர்களாக பணி புரிவார்கள்” என்றார்.

லக்னோ சிறையிலும் இதே பாணியில் கைதிகளுக்கு யோகா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இவர்களுக்கு கொலைக் கைதி கிருஷ்ணானந்த் டிவேடி யோகா பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். #Yoga
Tags:    

Similar News