செய்திகள்

ஆர்.எஸ்.எஸ்., பா.ஜனதா கருத்தையே சசிதரூர் பேசியுள்ளார் - சிவசேனா

Published On 2018-07-14 07:57 GMT   |   Update On 2018-07-14 07:57 GMT
இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivSena #ShashiTharoor #RSS
மும்பை:

பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறி இருந்தார்.

இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. சசிதரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.

இந்த நிலையில் இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி தனது பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறி இருப்பதாவது:-

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுமானால் இந்தியா இந்து பாகிஸ்தான் நாடாக மாறி விடும் என்று சசிதரூர் கூறி இருக்கிறார். இதை சுருக்கமாக பார்த்தோம் எனில் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா இந்து தேசம் என்று அறிவிக்கப்படும் என பொருள் கொள்ளலாம்.



இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரசில் இருந்து கொண்டு சசிதரூர் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதாவின் மொழியில் தான் அவர் பேசி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.

ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயணன்சிங் பேசியுள்ளார். இது இந்துக்களை புண்படுத்தும் கருத்தாகும். இதற்காக அக்கட்சி தலைவர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாமா?

இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ShivSena #ShashiTharoor #RSS #BJP
Tags:    

Similar News