செய்திகள்

கிராம மக்கள் ஒதுக்கி வைத்ததால் பெண்ணின் உடலை சைக்கிளில் எடுத்து சென்ற உறவினர்

Published On 2018-08-02 05:37 GMT   |   Update On 2018-08-02 05:37 GMT
ஒடிசா மாநிலத்தில் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததால் இறந்து போன பெண்ணின் உடலை அவரது உறவினர் தன்னந்தனியாக சைக்கிளில் எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா:

ஒடிசா மாநிலம் போவூத் மாவட்டம் கிருஷ்ணாபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சத்ருபன்கா.

இவருடன் அவரது மனைவி, மனைவியின் சகோதரி ஆகியோர் வசித்து வந்தனர். மனைவியின் சகோதரிக்கு திருமணம் ஆகவில்லை.

சத்ருபன்கா வேறு சாதி பெண்ணை மணந்ததால் கிராமத்தினர் ஆத்திரம் அடைந்து அவரை கிராமத்தை விட்டு ஒதுக்கிவைத்து இருந்தனர். மேலும் அவருக்கும் அவரது உறவினர்களுக்கும் இடையே சொத்து தகராறு இருந்தது.

இந்த நிலையில் அவரது மனைவி மற்றும் சகோதரிக்கு கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. இருவரையும் மருத்துவமனையில் சேர்த்தார். இதில் மனைவியின் சகோதரி சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை சத்ருபன்கா ஆம்புலன்ஸ் மூலம் தனது கிராமத்துக்கு கொண்டு சென்றார்.

ஆனால் ஒதுக்கி வைக்கப்பட்டு இருந்ததால் கிராமத்தினர் யாரும் இறுதி சடங்கு செய்ய எந்த உதவியும் செய்யவில்லை. இதேபோல உறவினர்களும் அவருக்கு உதவ முன்வரவில்லை.


இதனால் சத்ருபன்கா தனது மனைவியின் சகோதரி உடலை சைக்கிளில் வைத்து கொண்டு சென்றார். தனி நபராக அவர் இறுதி சடங்கு செய்தார்.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் இதே மாவட்டத்தில் இதே மாதிரியான சம்பவம் நடந்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News