செய்திகள்

மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளை புறக்கணித்த 26 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

Published On 2019-03-13 10:42 GMT   |   Update On 2019-03-13 10:49 GMT
மகாராஷ்டிராவில் தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்கள், பணியை செய்ய மறுத்ததால் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #RefusingElectionWork #TeachersBooked
பால்கர்:

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனையடுத்து பல்வேறு கட்சித்தலைவர்களும், முக்கிய நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்தல் கமிஷனும் இதற்கான ஆயத்த பணிகளை அனைத்து மாநிலங்களிலும் துரிதப்படுத்தி வருகின்றது.

மகாராஷ்டிராவில் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்கி நான்கு கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, வாக்காளர் பட்டியலில், பெயர்கள் சேர்த்தல், நீக்குதல் போன்ற பணிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.

அவ்வகையில் பால்கர் மாவட்டத்தின் நல்லசோபரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணி புரியும் ஆசிரியர்கள்  தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கடந்த ஆண்டு ஜூன் முதல் 2019 பிப்ரவரி வரை உள்ள தேர்தல் பணிகளை செய்து முடிக்க வேண்டும். ஆனால் இந்த பணிகளுக்காக நியமிக்கப்பட்ட 26 ஆசிரியர்கள் தேர்தல் பணிகளுக்கு வரவில்லை.

இதையடுத்து அப்பகுதியின்  தேர்தல் நடத்தும் அதிகாரி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், தேர்தல் பணிகளை செய்ய மறுத்த 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #RefusingElectionWork #TeachersBooked 
Tags:    

Similar News