செய்திகள் (Tamil News)

உத்தரகாண்ட் முன்னாள் முதல் மந்திரி மகன் காங்கிரசில் இணைந்தார்

Published On 2019-03-16 09:33 GMT   |   Update On 2019-03-16 10:16 GMT
உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மகனும் பாஜக பிரமுகருமான மணிஷ் கந்தூரி, ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார். #ManishKhanduri #FormerUttarakhandCM #Rahulgandhi
டேராடூன்:

2007-2009 மற்றும் 2011-2012 ஆண்டுகளுக்கு இடையில் உத்தரகாண்ட் மாநில முதல் மந்திரியாக பதவி வகித்தவர் புவன் சந்திரா கந்தூரி. ராணுவத்தில் மேஜராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவரை சுருக்கமாக பி.சி.கந்தூரி என அழைப்பதுண்டு. பாஜகவை சேர்ந்த இவர் 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம்.பி.யாக பதவி வகிக்கிறார்.

இந்நிலையில், உத்தரகாண்ட் மாநில தலைநகரான டேராடூனில் நடைபெற்றுவரும் பிரசார கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி மகனும் பாஜக பிரமுகருமான மணிஷ் கந்தூரி, ராகுல் காந்தி முன்னிலையில் இன்று காங்கிரசில் இணைந்தார்.

இந்த இணைப்பு தொடர்பாக இன்றைய கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி,  ‘மணிஷ் கந்தூரியின் தந்தையும் உங்கள் மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியுமான பி.சி.கந்தூரியை நீங்கள் மிகவும் நன்றாக அறிவீர்கள்.

ராணுவத்தில் முன்னர் பணியாற்றி பல தியாகங்களை செய்த  பி.சி.கந்தூரி தற்போதைய மத்திய அரசில் பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் தலைவராக இருந்தார். ராணுவ வீரர்களின் நலனுக்கு என்னவெல்லாம் இந்த அரசு செய்ய வேண்டும்? என்று ஆலோசனை கூறியதற்காக பாதுகாப்புத்துறை நிலைக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்டார். இப்போது அவரது மகன் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்’ என்று குறிப்பிட்டார்.



‘ராகுல் காந்தியின் தலைமையின்கீழ் மட்டுமே இந்தியா முன்னேற முடியும் என்பதை நம்புவதால் காங்கிரஸ் கட்சியில் இணையும் முடிவு தொடர்பாக எனது தந்தையிடம் தெரிவித்து ஆசி பெற்றேன்’ என மணிஷ் கந்தூரி தெரிவித்தார்.

ராகுல் காந்தியின் பிரசார கூட்ட மேடையில் உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல் மந்திரி பி.சி.கந்தூரியும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. #ManishKhanduri #FormerUttarakhandCM #Rahulgandhi
Tags:    

Similar News