செய்திகள்
கொய்யாச்செடியை பிரதமர் மோடியிடம் சுரேஷ்கோபி பி. ஒப்படைத்த காட்சி

மோடியின் இல்லத்தில் வளரப்போகும் கேரள மாணவியின் கொய்யாச்செடி

Published On 2021-09-04 03:43 GMT   |   Update On 2021-09-04 03:43 GMT
கேரள மாணவி ஜெயலட்சுமி வழங்கிய கொய்யாச்செடியை பிரதமர் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். அதை தனது இல்லத்தோட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
திருவனந்தபுரம்:

கேரள மாணவி ஒருவர் பரிசாக வழங்கிய கொய்யாச் செடியை பிரதமர் மோடியிடம் சுரேஷ்கோபி எம்.பி. ஒப்படைத்தார். அந்தச் செடி, டெல்லியில் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்ல தோட்டத்தில் வளரப்போகிறது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள குளநாடா கிராமத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி. இயற்கை வேளாண்மையில் மிகுந்த ஆர்வம் உள்ளவர். தனது வீட்டுத் தோட்டத்தில் இயற்கை வேளாண் முறையில் செடி, கொடிகள் வளர்த்து பச்சைப் பசேலென வைத்திருப்பவர். அதற்காக, கேரள அரசின் சிறந்த மாணவிக்கான ‘கர்ஷக திலகம்’ விருதும் பெற்றவர்.

மாணவி ஜெயலட்சுமி, தன் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்த ஒரு கொய்யாச் செடியை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்க நினைத்தார். அதன் மூலம், இயற்கை வேளாண்மை குறித்த செய்தியை நாடு முழுவதும் பரப்ப எண்ணினார்.

இந்நிலையில் இந்த வாரம், கொல்லம் மாவட்டம் பதனாபுரத்துக்கு வந்த நடிகரும், எம்.பி.யுமான சுரேஷ்கோபியிடம் பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கச் சொல்லி அந்த கொய்யாச் செடியை ஜெயலட்சுமி கொடுத்தார்.

சுரேஷ்கோபியும் அதை பொறுப்போடு டெல்லி எடுத்துச் சென்று மோடியிடம் வழங்கினார். அதுகுறித்த தகவல், புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்.

‘மாணவி ஜெயலட்சுமி வழங்கிய கொய்யாச் செடியை பிரதமர் மகிழ்வோடு பெற்றுக்கொண்டார். அதை தனது இல்லத் தோட்டத்தில் நடுவதற்கு ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார். கேரளாவின் ஒரு சின்னப் பெண் வழங்கிய கொய்யாச் செடி, பிரதமரின் இல்லத்தில் தளிர்க்கப்போகிறது. இது ஒரு நல்ல செய்தி. தூய ஜனநாயகத்தின் செய்தி’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதுகுறித்து அறிந்த மாணவி ஜெயலட்சுமி, ‘தனது கொய்யாச் செடி, பிரதமரை சென்று சேரும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும், தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாகவும்’ கூறியுள்ளார்.

Similar News