இந்தியா

துர்கா பூஜை விழா பந்தலில் நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு

Published On 2023-10-24 10:19 GMT   |   Update On 2023-10-24 10:19 GMT
  • சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது.
  • போதிய அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இல்லை.

கோபால் கஞ்ச்:

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியில் துர்கா பூஜை விழா நேற்று களை கட்டியது. இதற்காக பல இடங்களில் பந்தல் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகிறது. அங்குள்ள ஒரு பந்தலில் நடந்த துர்கா விழா கொண்டாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த பந்தலின் நுழைவு வாயிலில் திடீரென நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் சிக்கி பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் முண்டியடித்ததால் சிலர் கீழே விழுந்தனர். இதில் ஒரு குழந்தையும் சிக்கி கொண்டது. தரையில் விழுந்த அந்த குழந்தையை காப்பாற்ற 2 பெண்கள் முயன்றனர். அப்போது அவர்கள் கீழே விழுந்தனர். அவர்களால் எழுந்திருக்க முடியவில்லை. அவர்கள் மீது பலர் ஏறி மிதித்து ஓடினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே 2 பெண்கள் மற்றும் குழந்தை பரிதாபமாக இறந்தனர்.

மேலும் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

இதுபற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சாதர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த துர்கா விழா பந்தலில் அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்தது. ஆனால் போதிய அளவு போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் இல்லை. இதனால் நெரிசல் ஏற்பட்டபோது பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இதன் காரணமாக 3 பேர் பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

Tags:    

Similar News