இந்தியா

பிரஜ்வல் ரேவண்ணா மீது கட்டாயப்படுத்தி பொய் புகார் செய்ய மிரட்டுவதாக 3 பெண்கள் குற்றச்சாட்டு

Published On 2024-05-10 03:58 GMT   |   Update On 2024-05-10 03:58 GMT
  • பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர்.
  • இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் ஹாசன் தொகுதி எம்.பி.யாக இருந்து வருபவர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர் பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், பென் டிரைவ் வெளியானது. இந்த விவகாரம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரித்து வருகின்றனர். பிரஜ்வல் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம் என்றும், அவர்கள் பெயர் பாதுகாக்கப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 9 பெண்கள் புகார் அளித்துள்ளனர். அவர்களில் 2 பெண் அரசு அதிகாரிகள் உள்பட 6 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர். மற்ற பெண்கள் புகார் அளிக்க தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி கட்டாயப்படுத்தி போலீஸ் பெயரில் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக தேசிய மகளிர் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு கூறியுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக புகார் அளிக்கும்படி சீருடை அணியாமல், சாதாரண உடையுடன் வந்த போலீசார் 3 பெண்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக பொய் புகார் அளிக்கும்படி கூறியுள்ளனர். செல்போனில் போலீசார் எனக்கூறி புகார் அளிக்கும்படி தொல்லை கொடுத்துள்ளனர்.

இதுபற்றி 3 பெண்களும் தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளித்து, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர், என அதில் கூறப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பிரஜ்வல் ரேவண்ணா வழக்கில் புதிய திருப்பத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் குமாரசாமி கூறியதாவது:-

பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று விசாரணை அதிகாரிகள் மிரட்டுகிறார்கள். அவர்களை பொய் புகார் செய்ய கட்டாயப்ப டுத்துகிறார்கள். கடத்தி செல்லப்பட்டு மீட்கப்பட்ட பெண்ணை நீங்கள் எங்கே வைத்திருந்தீர்கள். ஏன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை. எல்லோரும் சட்டத்தை மதிக்க வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அதை விட்டுவிட்டு புகார் செய்ய மறுக்கும் பெண்கள் மீது விபச்சார வழக்குகள் போடுவதாக மிரட்டப்படுகின்றனர். இதனால் அச்சுறுத்தலுக்கு பயந்து பெண்கள் போலீசில் பொய் புகார் அளிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News