இந்தியா

41 தொழிலாளர்கள் மீட்பு: "இன்றுதான் தீபாவளி கொண்டாடினோம்"- உறவினர்கள் மகிழ்ச்சி

Published On 2023-11-29 04:45 GMT   |   Update On 2023-11-29 07:19 GMT
  • எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.
  • தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

உத்தரகாசி:

உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா மலைப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும்போது 41 தொழிலாளர்கள் சிக்கினர். அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர்.

17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு நேற்று 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்புப் பணியில் ஈடுபட்ட தேசிய மீட்பு படையின் அதிகாரி டாக்டர் ஷைலேஷ் குமார் சவுத்ரி தொழிலாளர்களுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தங்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு ஒருவரையொருவர் வாழ்த்தி கேக் துண்டுகளை பகிர்ந்து கொண்டனர்.

இதுகுறித்து ஷைலேஷ் குமார் சவுத்ரி கூறுகையில் "தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதால் அனைவரையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். எனது பிறந்தநாளைக் கொண்டாடும் போதெல்லாம், இந்த காட்சியையும் இந்த மீட்பு நடவடிக்கையையும் நான் நினைவில் கொள்வேன்" என்றார்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அவர்கள் கூறியதாவது:-

41 தொழிலாளர்களில் ஒருவரான உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராம் மிலனின் மகன் சந்தீப் குமார் கூறுகையில், "எனது தந்தை பத்திரமாக மீட்கப்பட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எனது தந்தையை அழைத்து வருவதற்காக எனது உறவினர்கள் உத்தரகாண்ட் சென்றுள்ளனர். மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்றார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஷிரவஸ்தி பகுதியை சேர்ந்த தொழிலாளி சந்தோஷ் குமார் என்பவரின் தாய் கூறுகையில், "சந்தோஷிடம் போனில் பேசினோம், தற்போது மருத்துவ மனையில் இருக்கிறார். இன்று தான் தீபாவளி கொண்டாடினோம். மத்திய அரசுக்கும், மீட்பு பணியாளர்களுக்கும் நன்றி" என்றார்.

தொழிலாளிகளில் ஒருவரான பீகார் மாநிலம் சாப்ரா பகுதியைச் சேர்ந்த சோனுவின் தாயார் கூறுகையில், "நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அரசு மற்றும் மீட்புக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி. நான் 2 நாட்களில் வீட்டுக்கு திரும்பி வருவேன் என்று என் மகன் தெரிவித்தார்" என்றார்.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியை சேர்ந்த தொழிலாளி மஞ்சித்தின் தந்தை கூறுகையில், "எனது மகன் பத்திரமாக மீட்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். சுரங்கப்பாதையில் சிக்கிய அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி" என்றார்.

ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் பகுதியை சேர்ந்த தொழிலாளர்களில் ஒருவரான தீரன் நாயக்கின் தாய் கூறுகையில், சுரங்கப்பாதையில் இருந்து எனது மகனையும் மற்ற தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கு நன்றி என்றார்.

அசாம் மாநிலம் கோக்ரஜார் பகுதியை சேர்ந்த தொழிலாளி ராம் பிரசாத் நர்சாரியின் தந்தை கூறுகையில், "சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்ட இந்திய அரசுக்கும், அசாம் அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதைக் கேட்டு நான் நிம்மதி அடைந்தேன்" என்றார்.

Tags:    

Similar News