தனியார் நிறுவனத்தில் தகவல்களை ஹேக்கிங் செய்து திருடிய 5 தொழில்நுட்ப வல்லுநர்கள் கைது
- நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர்.
- தலைமறைவாக இருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூரு ஆண்டுதோறும் வளர்ந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் ஐடி எனும் தகவல் தொழில்நுட்பம், பிடி எனும் உயிரி தொழில்நுட்பம் உள்பட பல முன்னணி நிறுவனங்கள் மற்றும் முன்னணி தொழிற்சாலைகள் பெங்களூருவில் அமைந்திருப்பது தான். இதை நோட்டமிட்டு இணையதளத்தை பயன்படுத்தி தகவல்களை திருடி மோசடி செய்யும் ஹேக்கர் கும்பல் பெங்களூருவில் நடமாடுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் வீடியோ கான்பரன்ஸ் கால் மூலம் சென்னை மென்பொருள் நிறுவனத்தின் வெளிநாட்டு வாடிக்கையாளர் தரவு திருடப்பட்டதாக பெங்களூரு மாநகர போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
அதில், கம்பெனிசிவ் கிரெடிட் ரிப்போர்ட்டிங் சாப்ட்வேர் செயலியை பயனர்களால் அணுக முடியவில்லை. இது தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அழைப்புகள் வந்தன. நிறுவனம் வழங்கிய வங்கி மென்பொருளை அணுக முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவித்தனர். மர்ம நபர்கள் தங்களது நிறுவனத்தின் செயலியை முடக்கி வாடிக்கையாளர் தரவுகளை திருடி உள்ளனர். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில் ஹேக்கிங் செய்தது பெங்களூருவை சேர்ந்த காவ்யா வசந்த கிருஷ்ணன், ரவிதா தேவசேனாபதி மற்றும் கருப்பையா, சென்னையை சேர்ந்த எடிசன் ரமேஷ் மற்றும் ராம்குமார் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் 5 பேரும் ஐ.டி. தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆவார்கள். கடந்த அக்டோபர் மாதம் 9 -ந் தேதி அதிகாலை 1 மணியளவில் சென்னையில் இருந்து தொடங்கிய 3 மணி நேர கான்பரன்ஸ் அழைப்பின்போது ஹேக்கர் செய்து மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.