திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் 64 விலங்குகள் காசா நோய் பாதித்து பலி- கேரள கால்நடை துறை மந்திரி தகவல்
- பூங்காவில் வளர்க்கப்படும் சில விலங்குகள் அடிக்கடி பலியாவதாக புகார்கள் எழுந்தன.
- விலங்குகளுக்கு காசா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உயிரியல் பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் கரும்புலி, சிறுத்தை, புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை பாம்புகள் என ஏராளமான விலங்குகள் உள்ளன. இயற்கை சூழலில் விலங்குகள் வளர்க்கப்படுகிறது.
இதனை பார்க்க கேரளா மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் இருந்தும் சுற்றுலா பயணிகள் இங்கு செல்வது வழக்கம். இந்த பூங்காவில் வளர்க்கப்படும் சில விலங்குகள் அடிக்கடி பலியாவதாக புகார்கள் எழுந்தன.
இதுபற்றி கேரள சட்டசபை கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு கேரள கால்நடைதுறை மந்திரி சிஞ்சுராணி பதில் அளித்தார்.
அப்போது திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்பட்ட அரிய வகை விலங்குகளில் 64 விலங்குகள் இறந்துள்ளன. இவற்றின் சாவுக்கு காரணம் என்ன? என கால்நடை துறை டாக்டர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் விலங்குகளுக்கு காசா நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அவற்றின் உடல் உறுப்புகளின் மாதிரிகளை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த தகவல் தெரியவந்தது.
இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் மட்டும் சிறுத்தை, கரும்புலி, புள்ளிமான் போன்றவை இறந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இங்குள்ள மற்ற விலங்குகளுக்கு தடுப்பு மருந்துகள் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவற்றின் உடல்நிலையையும் தினமும் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.