இந்தியா

இரும்பு தாது முறைகேடு வழக்கில் கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

Published On 2024-10-27 10:43 GMT   |   Update On 2024-10-27 10:43 GMT
  • சதீஷ் செயில் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
  • இரும்பு தாது முறைகேடு வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் கடந்த 10 ஆண்டாக விசாரணை நடந்தது.

பெங்களூரு:

கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சதீஷ் செயில் (வயது 58). இவர் 6 லட்சம் மெட்ரிக் டன் மதிப்பிலான இரும்பு தாதுகள் திருடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக கைது செய்யப்பட்டு இருந்தார்.

இந்த இரும்பு தாது முறைகேடு குறித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து சதீஷ் செயில் உள்பட 7 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த இரும்பு தாது முறைகேடு வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டில் கடந்த 10 ஆண்டாக விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் நேற்று மாலை 4 மணி அளவில் பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சந்தோஷ் கஜனனபட் பரபரப்பு தீர்ப்பு அளித்தார். அப்போது சதீஷ் செயில் நீதிபதி முன்னிலையில் கதறி அழுதார். மேலும் நான் எந்த குற்றமும் செய்யவில்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்துள்ளனர் என்று கூறினார். இதை பொருட்படுத்தாத நீதிபதி, தண்டனை விவரங்களை வாசித்தார். அதில் நீதிபதி, சதீஷ் செயில் எம்.எல்.ஏ., அரசு அதிகாரி மகேஷ் பிலியே உள்பட 7 பேருக்கும் தலா 7 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தம் ரூ.47.61 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து எம்.எல்.ஏ. உள்பட இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர்.

இரும்பு தாது முறைகேடு வழக்கில் 7 ஆண்டு சிறை தண்டனை பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. சதீஷ் செயில் எம்.எல்.ஏ. பதவியை இழக்கிறார். சட்டசபை செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பிக்க உள்ளார்.

Tags:    

Similar News