அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த நோயாளி
- உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன்.
- டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
திருவனந்தபுரம்:
கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கொட்டாரக்கரா அரசு ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் பணியில் இருந்த வந்தனா தாஸ் என்ற பெண் டாக்டரிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவர் அவரை கத்திரி கோலால் குத்தி கொலை செய்தார்.
இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில் கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பெண் டாக்டர் ஒருவருக்கு நோயாளி கற்பழிப்பு மிரட்டல் விடுத்தார். இது பற்றி அந்த டாக்டர் காந்தி நகர் போலீசில் புகார் செய்தார். அதில், நள்ளிரவு 2 மணி அளவில் போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்த நோயாளியை அழைத்து வந்தனர். அவரை நான் பரிசோதித்த போது, அந்த நோயாளி என்னை தகாத வார்த்தைகள் பேசினார். மேலும் என்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுவதாகவும் மிரட்டினார்.
இதனால் நான் அதிர்ந்து போனேன். உடனே இது பற்றி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு உதவியாளரை அனுப்பி புகார் செய்தேன். போலீசார் விரைந்து வந்து அந்த நபரை மீண்டும் பிடித்து சென்றனர். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.
கேரளாவில் வந்தனாதாஸ் என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், டாக்டர்களுக்கு அச்சுறுத்தல் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது.
மேலும் ஆஸ்பத்திரி பாதுகாப்பு சட்டத்திலும் திருத்தம் கொண்டு வந்தது. அதன்பின்பும் ஒரு சில அரசு ஆஸ்பத்திரிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்தது. இப்போது கோட்டயம் அரசு ஆஸ்பத்திரியில் பெண் டாக்டருக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்தது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.