ரூ.7 கோடி கேட்டு முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்
- சித்தா ராகவாராவ் வீட்டில் கடந்த வாரம் 2 பேர் நள்ளிரவு 12.45 மணியளவில் சுவர் ஏறி குதித்தனர்.
- வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் ஓங்கோலுவில் உள்ள முன்னாள் அமைச்சர் சித்தா ராகவாராவ் வீட்டின் முன்பு மர்ம நபர் ஒருவர் 2 கடிதங்களை வீசி சென்றார்.
அந்த கடிதங்களை பிரித்து படித்தபோது, வீட்டில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
வெடிகுண்டுகளை அகற்ற ரூ.7 கோடி தர வேண்டும் என எழுதி இருந்தது. இதனை கண்டு முன்னாள் அமைச்சரின் குடும்பத்தார் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் வீட்டில் சோதனை நடத்தினர்.
அங்கு வெடிகுண்டுகள் இல்லாததால் நிம்மதி அடைந்தனர். இது தொடர்பாக வீட்டிற்கு வெளியே வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை சோதனை செய்து பார்த்தனர்.
அதில் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வீசியவர் அடையாளம் காணப்பட்டதை அடுத்து, உடனடியாக போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
சித்தா ராகவா ராவ் வீட்டில் கடந்த வாரம் நள்ளிரவு 12.45 மணியளவில் 2 பேர் சுவர் ஏறி குதித்தனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் வந்ததால் திருடர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
இந்த நிலையில் வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.