தலைக்கவசத்துக்குள் பதுக்கியிருந்த பாம்பு கடித்து நிலைகுலைந்த வாலிபர்
- மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார்.
- மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக் கோடு கோழியாண்டி நடுவத்தூர் பகுதியை சேர்ந்தவர் ராகுல்(வயது30). தனியார் நிறுவன ஊழிரான இவர், சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் சென்றார். அப்போது அவர் தலைக்கவசம் அணிந்திருந்தார்.
மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த அவர், தனது தலையில் ஏதே கடிப்பதை உணர்ந்தார். கடும் வலி ஏற்பட்டதையடுத்து ரோட்டின் ஓரமாக நிறுத்தி தலைக்கவசத்தை கழற்றினார். அப்போது தலை கவசத்துக்குள் இருந்து பாம்பு ஒன்று கீழே விழுந்து ஓடியது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராகுல் வலி தாங்க முடியாமல் நிலைகுலைந்து நின்றார். தன்னை பாம்பு கடித்தது பற்றி அவர், அந்த வழியாக வந்தவர்களி டம் தெரிவித்து தன்னை மருத்துவமனையில் சேர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் கோவிலாண்டி பகுதியில் உள்ள தாலுகா மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு முதலதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின், மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பாம்பு கடித்ததும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராகுல் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.