கேரள காங்கிரஸ் நிர்வாகிகள் 4 பேர் கட்சியில் இருந்து நீக்கம்- மாநில தலைவர் அதிரடி நடவடிக்கை
- இரட்டை கொலை சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- 4 பேரையும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து மாநில தலைவர் சுதாகரன் நீக்கினார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பெரியா பகுதியை சேர்ந்தவர்கள் சரத்லால் மற்றும் கிருபேஷ். இளைஞர் காங்கிரஸ் தொண்டர்களான இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் கேரளா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த இரட்டை கொலை வழக்கின் 13-வது குற்றவாளி பாலகிருஷ்ணன். இவரது மகன் திருமணம் பெரியா பகுதியில் உள்ள கலையரங்கில் கடந்த 7-ந்தேதி நடந்தது. அந்த திருமணத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டதாக தகவல் வெளியாகியது.
இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் கொலை வழக்கு குற்றவாளியின் மகன் திருமணத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்ட விவகாரத்தால் கட்சிக்குள்ளேயே விமர்சனங்கள் எழுந்தன. இதனால் இந்த விவகாரம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 2 பேர் கொண்ட விசாரணை கமிஷனை மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் அமைத்தார்.
விசாரணை கமிஷனில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நியாஸ், அரசியல் விவகாரக்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் ஆகியோர் விசாரணை நடத்தினர். மேலும்தங்களின் விசாரணை அறிக்கையை மாநில தலைவரிடம் சமர்ப்பித்தனர்.
இரட்டை கொலை வழக்கு குற்றவாளியின் மகனின் திருமணத்தில் பங்கேற்று மாநில காங்கிரஸ் கட்சி உறுப்பினர் பால கிருஷ்ணன், முன்னாள் தொகுதி தலைவர்கள் ராஜன், பிரமோத், ராம கிருஷ்ணன் ஆகிய 4 பேரும் பெரிய தவறிழைத்து விட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 4 பேரையும் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து மாநில தலைவர் சுதாகரன் நீக்கினார்.