நடிகர் பகத்பாசில் படப்பிடிப்பால் சிகிச்சை பாதிப்பு: விளக்கம் கேட்டது மனித உரிமை ஆணையம்
- அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன.
- சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார்.
திருவனந்தபுரம்:
மலையாள பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் பகத்பாசில். தமிழில் கமல்ஹாசனின் விக்ரம்-2, உதயநிதியின் மாமன்னன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
இவர் மலையாளத்தில் புதிதாக பைங்கிளி என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி தாலுகா மருத்துவமனையில் நடத்தப்பட்டது. இதில் தான் தற்போது பிரச்சனை வெடித்துள்ளது.
படப்பிடிப்பின் போது அங்கிருந்த நோயாளிகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், டாக்டர்கள் சிகிச்சையில் இருக்கும் போதே படப்பிடிப்பு நடத்தப்பட்டதாகவும், உடல்நல பாதிப்புடன் வந்தவர், அவசர சிகிச்சை பிரிவுக்கு செல்ல முடியவில்லை என்றும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக செய்திகளும் வெளியானது.
இதனைத் தொடர்ந்து கேரள மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து விசாரணையில் இறங்கி உள்ளது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ததோடு, 7 நாட்களுக்குள் எர்ணாகுளம் மாவட்ட மருத்துவ அதிகாரி, அங்கமாலி தாலுகா மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையில் சம்பவம் குறித்து மாநில சுகாதா ரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் விசாரணையில் இறங்கி உள்ளார். இது தொடர்பாக சுகாதாரத்துறை இயக்குநரிடம் அவர் விளக்கம் கேட்டுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.