தற்கொலை இடமாக மாறும் நீட் பயிற்சி முனையம்: கோட்டாவில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை
- மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்.
- ஒரு பக்கம் பெற்றோர்கள், மற்றொரு மக்கள் பயிற்சி மையம் என நெருக்கடி கொடுப்பதால் மாணவர்கள் மனஅழுத்தம்.
இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்கள் கஷ்டப்படுகிறார்கள். எப்படியாவது மருத்துவராக வேண்டும் என நீட் தேர்வில் தேர்ச்சி பெற மாணவர்களை பெற்றோர்கள் அதிக அளவில் பணம் செலவழித்து நீட் தேர்வு மையத்தில் சேர்த்து விடுகிறார்கள்.
இதை லாப நோக்கத்தில் பார்க்கும் தனியார் மையங்கள் நாட்டில் பெரும்பாலான இடங்களில் நீட் பயிற்சி மையத்தை அமைத்துள்ளன. இந்த பயிற்சி மையத்தில் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். இந்த மையங்கள் தங்களது பெயர்களை நிலைநாட்ட, மாணவர்களை கசக்கி பிழிந்து எடுக்கிறார்கள்.
நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் அதிகமாக உள்ளன. இதனால் பயிற்சி முனையமாக கோட்டா திகழ்கிறது. வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் அதிகமான அளவில் கோட்டாவில் உள்ள நீட் பயிற்சி மையங்களில் படித்து வருகிறார்கள். இவர்கள் இங்குள்ள விடுதிகளில் தங்கி படித்து வருகிறார்கள்.
ஏற்கனவே பெற்றோர்களை பிரிந்து வந்து தனிமையில் தங்கியிருக்கும் மாணவர்களை, தங்களது மையம் முதன்மையாக விளங்க வேண்டும் என நினைக்கும் பயிற்சி மையங்கள் தேர்ச்சியை அதிகமாக காண்பிக்க படிபடி என நெருக்கடி கொடுக்கின்றன. இதனால் ஒரு கட்டத்திற்கு மேல் மனஅழுத்தத்தை எதிர்கொள்ள முடியாமல் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.
கடந்த வருடத்தில் மட்டும் கோட்டாவில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்றிரவு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த மாணவன் ஒருவர் கோட்டாவின் ஜவஹர் நகர் பகுதியில் தங்கிருந்து படித்து வந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
அவரது உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீசார், பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பெற்றோர்கள் வந்ததும் அந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க ராஜஸ்தான் அரசு, பயிற்சி மையங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.