இந்தியா

அரவிந்த் கெஜ்ரிவால் (கோப்பு படம்)

குஜராத் தேர்தலில் மோடிக்கு ஆதரவானவர்களின் இதயங்களை ஆம் ஆத்மி வெல்லும்- கெஜ்ரிவால்

Published On 2022-11-20 15:10 GMT   |   Update On 2022-11-20 15:35 GMT
  • அவர்களுக்கு 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள்.
  • வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன்.

பஞ்சமஹால்ஸ்:

குஜராத் சட்டசபைத் தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 182 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று பஞ்சமஹால்ஸ் மாவட்டத்தில் உள்ள ஹலோ பகுதியில் நடைபெற்ற பேரணியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். தமது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


அப்போது அங்கிருந்த சிலர் மோடி, மோடி என்று ஆதரவு குரல் எழுப்பினர். இதையடுத்து அந்த பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கெஜ்ரிவால் பேசியதாவது:

சில நண்பர்கள் மோடி, மோடி என்று கூக்குரலிடுகிறார்கள், நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம், ஆனால் உங்கள் குழந்தைகளுக்கான பள்ளிகளை உருவாக்க இருப்பது கெஜ்ரிவால்தான் என்று கூற விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு கோஷம் எழுப்பினாலும், உங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப் போவது கெஜ்ரிவால்தான். எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. நீங்கள் யாரை வேண்டுமானாலும் ஆதரித்து கோஷம் எழுப்பலாம். ஒரு நாள் உங்கள் மனதை வென்று எங்கள் கட்சிக்கு கொண்டு வருவோம்.

மாநிலத்தில் ஏராளமான இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர், அவர்களுக்கு எங்கள் கட்சி வேலைக்கான உத்தரவாதம் மற்றும் வேலை தேடுபவர்களுக்கு ரூ 3,000 உதவித் தொகையை வழங்கும். பள்ளிகள் பற்றி பேச இங்கு எந்த கட்சியும் இல்லை. பள்ளிகள், மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என்று எந்த கட்சியாவது வாக்குறுதி அளித்துள்ளதா? எங்கள் கட்சி மட்டுமே இந்த பிரச்சனைகளை பற்றி பேசுகிறது.

நீங்கள் சிறந்த பள்ளிகளை விரும்பினால் என்னிடம் வாருங்கள். நான் ஒரு பொறியாளர். உங்களுக்கு மின்சாரம், மருத்துவமனைகள் அல்லது சாலைகள் தேவை என்றால் என்னிடம் வாருங்கள். இல்லையெனில் அவர்களிடம் (பாஜகவிடம்) செல்லுங்கள். நீங்கள் அவர்களுக்கு (பாஜகவுக்கு) 27 ஆண்டுகள் கொடுத்தீர்கள், எனக்கு ஐந்து ஆண்டுகள் கொடுங்கள், வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் வரமாட்டேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News