இந்தியா

ராஜஸ்தானில் பழைய பட்ஜெட் உரையை வாசித்த முதல்வர்... சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி

Published On 2023-02-10 12:35 GMT   |   Update On 2023-02-10 12:39 GMT
  • பட்ஜெட்டை தவறுதலாக வாசித்ததற்காக அசோக் கெலாட் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
  • பாஜக தலைவர் வசுந்தரா ராஜே அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார்.

ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. நிதித்துறை பொறுப்பும் முதல் மந்திரி அசோக் கெலாட்டிடமே உள்ளதால் பட்ஜெட்டை அவரே தாக்கல் செய்தார். அசோக் கெலாட் பட்ஜெட் தாக்கல் செய்து உரையை வாசித்துக்கொண்டு இருந்தார். சுமார் 7 நிமிடங்கள் வாசித்த நிலையில், அவர் கடந்த ஆண்டின் பட்ஜெட் உரையை படிப்பதை தலைமை கொறடா மகேஷ் ஜோஷி, கவனித்தார். உடனடியாக அவர் அசோக் கெலாட்டிடம் இதைக் கூறினார்.

உடனே சுதாரித்துக்கொண்ட அசோக் கெலாட் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்தினார். தவறுதலாக வாசித்ததற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர், இந்த ஆண்டின் பட்ஜெட்டை வாசித்தார்.

முதல்வரின் இந்த கவனக்குறைவை சுட்டிக்காட்டி, பாஜக எம்.எல்.எக்கள் சட்டசபையில் கடும் அமளியில் ஈடுபட்டனர். அவையின் மையப்பகுதிக்கு வந்த பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். உறுப்பினர்களை அமைதி காக்குமாறு சபாநாயகர் வலியுறுத்தினார். ஆனாலும் அவர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல் மந்திரியும் பாஜக தலைவருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டை கடுமையாக விமர்சித்தார். வசுந்தரா ராஜே பேசுகையில், "நான் முதல் மந்திரியாக இருந்தபோது பட்ஜெட் வாசிப்பதற்கு முன்பாக முழுமையாக சரிபார்த்துக்கொள்வேன். கடந்த பட்ஜெட்டை மீண்டும் வாசிக்கும் முதல்வரின் கையில் மாநிலம் எந்த அளவுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள்" என்றார்.

இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது, இது கசிந்துவிட்டதா? என்று பாஜக தலைவர் குலாப் சந்த் கட்டாரியா கூறினார்.

இன்று முதல்வர் கெலாட் பழைய பட்ஜெட்டை தாக்கல் செய்ததன் மூலம் ராஜஸ்தான் சட்டசபை அவமதிக்கப்பட்டுள்ளது என பாஜக எம்எல்ஏ ராஜேந்திர ரத்தோர் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த அசோக் கெலாட், 'உங்கள் கையில் கொடுக்கப்பட்டு இருக்கும் பட்ஜெட்டின் நகலில் இருந்து என்னிடம் இருக்கும் பட்ஜெட் உரையில் வேறுபாடு இருந்தால் என்னிடம் சுட்டிக்காட்டுங்கள். பட்ஜெட் உரை கசிந்துவிட்டதாக எப்படி சொல்ல முடியும்? தவறுதலாக கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்த பக்கங்கள் சேர்க்கப்பட்டு விட்டது" என்றார்.

Tags:    

Similar News