பாராளுமன்ற தேர்தல்: ராஜினாமாவை வாபஸ் பெற்ற காங்கிரஸ் எம்.பி.
- தேர்தலில் போட்டியிட சீட் வழங்காததால் அசாம் எம்.பி. அப்துல் காலிக் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார்.
- அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார்.
புதுடெல்லி:
அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 14 எம்.பி. தொகுதிகளில் காங்கிரஸ் கட்சிக்கு 3 எம்.பி.க்கள் இருந்தனர். அதில் 2 பேருக்கு வரும் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
பார்பேட்டா தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான அப்துல் காலிக்குக்கு இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு பதிலாக தீப் பயான் என்பவரை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியது.
அப்துல் காலிக் இதுவரை இரண்டு முறைஎம்.எல்.ஏ.வாகவும், ஒரு முறை எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்து வந்த அப்துல் காலிக், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து சமீபத்தில் ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், அசாம் எம்.பி.யான அப்துல் காலிக், காங்கிரஸ் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், தனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்த அப்துல் காலிக், காங்கிரசை வலுப்படுத்துவது காலத்தின் தேவை. எனவே எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன். ராகுல் காந்தி மற்றும் உங்களின் திறமையான தலைமையின் கீழ் பணியாற்ற விரும்புகிறேன் என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.