தொடர் உண்ணாவிரதம், மோசமான உடல்நிலை: டெல்லி அமைச்சர் அதிஷி மருத்துவமனையில் அனுமதி
- அதிஷி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் குறைவுது மிகவும் ஆபத்து.
டெல்லியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அண்டை மாநிலமான அரியானா குறிப்பிட்ட அளவிலான தண்ணீரை வழங்காததால் தண்ணீர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக டெல்லி அரசு விமர்சித்து வருகிறது.
இந்த நிலையில், டெல்லி அமைச்சர் அதிஷி அரியானா அரசு தண்ணீர் திறந்துவிட கோரி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார். இன்றுடன் ஐந்தாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், அதிஷியின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதையடுத்து சிகிச்சை வழங்குவதற்காக அதிஷி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் அதிஷிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிஷின் உடலில் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் மிகவும் கணிசமான அளவு குறைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வளவு வேகமாக அதிஷியின் சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் குறைவுது மிகவும் ஆபத்தான ஒன்று என மருத்துவர்கள் தெரிவித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
கடும் வெப்பம் காரணமாக டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக அண்டை மாநிலமான அரியானாவில் இருந்து டெல்லிக்கு தினமும் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. எனினும், நிர்ணயிக்கப்பட்டதை விட 100 மில்லியன் கலோன் அளவு குறைவாகவே அரியாணா தண்ணீர் திறந்துவிடுகிறது.