கனடாவில் உள்ள இந்து கோவில் மீது தாக்குதல் - பிரதமர் மோடி கண்டனம்
- கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன்.
- கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்.
கனடாவின் பிராம்டன் நகரில் அமைந்துள்ள ஹிந்து மகாசபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிராம்டனில் உள்ள ஹிந்து மகா சபை கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது அங்கு கூடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் குச்சியால் தாக்கியுள்ளனர்.
கையில் காலிஸ்தான் கொடியுடன் அவர்கள் பக்தர்களை தாக்கும் வீடியோ இணையத்தில் வெளியானது. இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு கனடா பிரதமர் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது, மதத் தளத்தில் நடக்கும் வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஒவ்வொரு கனேடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பத்துக்கு எதிர்க்கட்சி மற்றும் இந்திய வம்சாவளி அரசியல்வாதிகள் தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கனடாவில் இந்து கோவில் தாக்கப்பட்டதற்கு இந்திய பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோன்று நமது இந்திய தூதர்களை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசாங்கம் நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.