இந்தியா

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு

Published On 2024-06-22 05:00 GMT   |   Update On 2024-06-22 05:00 GMT
  • கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர்.

திருப்பதி:

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம் தாடே பள்ளி அடுத்த சீதா நகரத்தில் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான படகு இல்லம் உள்ளது.

கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் படகு இல்லம் இடித்து தள்ளப்பட்டது. இடிக்கப்பட்ட படகு இல்லத்தை குறைந்த குத்தகை வாடகைக்கு எடுத்து அங்கு பிரம்மாண்ட முறையில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி அலுவலகம் கட்டும் பணி நடந்து வந்தது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலக கட்டுமான பணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். கட்சி அலுவலகத்தை இடிக்க கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இருப்பினும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் கொண்டு வந்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை இடித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் திரண்டு வந்தனர்.

அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினரை தடுத்து நிறுத்தினர். அப்போது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து தனியார் மண்டபங்களில் அடைத்தனர். அதிகாலையில் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News