5 பேர் உயிரிழப்புக்கு காரணமாக கட்டடம் சட்ட விரோதகமாக கட்டப்பட்டது: கடும் நடவடிக்கை என டி.கே. சிவக்குமார் தகவல்
- புதிதாக கட்டப்பட்ட கட்டடம் முழுமையாக இடிந்து விழுந்தது.
- 21 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பெங்களூருவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஹோரமாவு அகாரா என்ற பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வந்த அடுக்குமாடி கட்டடம் திடீரென்று முழுமையாக இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து நடைபெற்ற இடத்திற்கு துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் நேராக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த கட்டடம் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. இதில் தொடர்புடைய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக டி.கே. சிவக்குமார் கூறுகையில் "இடிந்து விழுந்த கட்டடத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை. சட்டவிரோத செயல்கள் நடந்திருக்கிறது. உரிமையாளர், ஒப்பந்தக்காரர் மற்றும் தொடர்புடைய அனைவர்களது மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு முழுவதும் இது போன்ற செயல்களுக்கு எதிராக ஒரு முடிவு எடுப்போம்.
சட்டவிரோதமான அனைத்து கட்டுமான தொழில்களும் உடனடியாக நிறுத்தப்படும். ஒப்பந்தகாரர்கள், என்னுடைய அதிகாரிகள், நிலத்தின் உரிமையாளர்கள் கூட என அனைவரும் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், ஏழு பேர் காயம் அடைந்துள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்டது, நோட்டீஸ் வழங்கிய பின்னர், உடனடியாக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இது எங்களுக்கு மிகப்பெரிய பாடம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.