null
- கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் தீவிரமடைந்து உள்ளது. ஆலப்புழா பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இது கண்டறியப்பட்டது. இந்த காய்ச்சல் மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பிருக்கிறது என கருதப்பட்டதால் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த மாவட்டத்தில் ஏராளமான கோழிகள், வாத்துகள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் கோட்டயம் மாவட்டத்துக்கும் தற்போது பறவை காய்ச்சல் பரவி உள்ளது. இதனை தொடர்ந்து வருகிற 29-ந் தேதி வரை இந்தப் பகுதியில் கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டயம் மற்றும் அதனை சுற்றி உள்ள 10 கி.மீட்டர் தொலைவு பகுதிகள் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. கோட்டயம் அருகே உள்ள மணற்காட்டில் அரசு கோழிப்பண்ணையில் வளர்க்கப்படும் கோழிகளுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு, நூற்றுக்கணக்கான கோழிகள் திடீரென இறந்தன. அவற்றின் ரத்த மாதிரிகளை சோதனை செய்ததில், பறவை காய்ச்சல் பாதிப்பில் தான் அவை இறந்துள்ளன என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிகள், வாத்துகள் மற்றும் காடைகளை கொல்ல மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.