இந்தியா (National)

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்- விஜயேந்திரா பேட்டி

Published On 2024-06-05 04:12 GMT   |   Update On 2024-06-05 04:12 GMT
  • மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜனதாவை ஆதரித்துள்ளனர்.
  • உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது.

பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து விஜயேந்திரா பெங்களூருவில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜ.க. கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரசுக்கு 9 தொகுதிகள் கிடைத்துள்ளது. பா.ஜ.க., ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி தேர்தலை எதிர்கொண்டன. 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறிய காங்கிரசாருக்கு ஏமாற்றம் தான் கிடைத்துள்ளது. உத்தரவாத திட்டங்களால் வெற்றி பெற்றுவிடலாம் என்று அவர்கள் கண்ட கனவு நனவாகிவிட்டது. கர்நாடகத்தில் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டியுள்ளனர்.

கர்நாடகத்தில் எங்களின் வெற்றிக்கு காரணமான பா.ஜ.க., ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என்ற நோக்கத்தில் மக்கள் பா.ஜ.க.வை ஆதரித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மண்டியா தொகுதியில் போட்டியிட்ட குமாரசாமி 2 லட்சத்து 84 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி குறித்து குமாரசாமி மண்டியாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனதா தளம் (எஸ்) கையில் இருந்து மண்டியா தொகுதி கை தவறிவிட்டது. இந்த தொகுதி ஜனதா தளம் (எஸ்) கட்சியின் இரும்பு கோட்டையாகும். தற்போது அந்த இரும்பு கோட்டையை ஜனதா தளம் (எஸ்) கட்சி தக்க வைத்துக் கொண்டது. என்னை வெற்றிபெற செய்த மண்டியா தொகுதி மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் வெற்றி சர்க்கரை நாட்டில் வசித்து வரும் ஒவ்வொரு தந்தை-தாய்க்கும், அக்காள்-தங்கைக்கும், அண்ணன்-தம்பிக்கும் கிடைத்த வெற்றி. ஜனதா தளம்(எஸ்)-பா.ஜ.க. தொண்டர்கள் ஒன்று சேர்ந்து வேலை பார்த்துள்ளனர். என்னை இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மோடி 3-வது முறையாக பிரதமராவார். அவர் நல்லாட்சி வழங்குவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News