ஆங்கிலேயர்களை விட மோசமானது பாஜக.. பகத் சிங் கடிதத்தை மேற்கோள் காட்டி அரவிந்த் கெஜ்ரிவால் விளாசல்
- ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார்.
- இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது.
கடந்த பிப்ரவரியில் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் பாஜகவிடம் தோற்ற பின்னர் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று முதல் முறையாக டெல்லியில் உரையாற்றினார்.
இன்று பகத் சிங் நினைவு நாளை ஒட்டி டெல்லியில் ஆம் ஆத்மி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய கெஜ்ரிவால், பாஜக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மனதில் என்ன கனவுகள் வைத்திருந்தார்களோ, இன்று அவர்களின் ஒரு கனவு கூட நிறைவேறவில்லை. பகத் சிங் சிறையில் இருந்து எழுதிய கடிதங்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறைய இருந்தன. ஆனால் ஆங்கிலேயர்கள் அவற்றை தடை செய்யாமல் பகத் சிங்கின் தோழர்களுக்கு அனுப்பினர்.
நான் சிறையில் இருந்தபோது, துணை நிலை ஆளுநருக்கு ஒரு கடிதம் எழுதினேன், எனக்கு பதிலாக அதிஷி கொடியை ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டிருந்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. இந்த கடிதத்தை அனுப்பவேண்டி நான் சிறை கண்காணிப்பாளருக்கு கொடுத்தேன்.
ஆனால் அந்தக் கடிதம் துணைநிலை ஆளுநரை அடையவில்லை. அத்தகைய கடிதத்தை எழுத எனக்கு எவ்வளவு தைரியம் என்று கேட்கும்விதமாக ஷோ-காஸ் நோட்டீஸ் தான் வந்தது. பகத் சிங்கிற்கு எந்தக் கடிதமும் எழுத சுதந்திரம் இருந்தது. ஆனால் என்னால் இரண்டு வரிகள் கொண்ட கடிதம் எழுத முடியவில்லை. நீங்கள் (பாஜக) பிரிட்டிஷாரை விட மோசமானவர்கள்.
எங்கள் முன்மாதிரிகள் பாபாசாகேப் அம்பேத்கர் மற்றும் பகத் சிங். ஆங்கிலேயர்களை அகற்றுவது மட்டும் போதாது, சமூகத்தின் கட்டமைப்பு மாற வேண்டும் என்று பகத் சிங் கூறுவார். இல்லையெனில், வெள்ளை நிற ஆட்சியாளருக்கு பதிலாக பழுப்பு நிற தோல் ஆட்சியாளர்கள் வருவார்கள். இதுதான் நடந்தது. இன்றைய ஆட்சியாளர்கள் ஆங்கிலேயர்களை விட மோசமானவர்கள்.
பாஜக தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த 48 மணி நேரத்திற்குள் பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் உருவப்படங்களை அரசு அலுவலகங்களில் இருந்து அகற்றப்பட்டன. பகத் சிங்கை விட நாட்டிற்காக தியாகம் செய்தவர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் அவர்களிடம் கேட்க விரும்புகிறேன்.
இதைப் பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன், இதையெல்லாம் பாஜக செய்தபோது, காங்கிரஸ் அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது இரு கட்சிகளுக்கும் இடையே ஏதோ ஒரு கூட்டுச் சதி நடப்பதைக் காட்டுகிறது என்று தெரிவித்தார். மேலும் மகளிருக்கு பாஜக அளித்த ரூ.2500 உதவித்தொகை வாக்குறுதி உள்ளிட்டவற்றை இன்னும் நிறைவேற்றவில்லை என கெஜ்ரிவால் குற்றம்சாட்டினார்.