400 வாகனங்கள் அணிவகுப்பு.. 300 கிமீ பயணம்.. காங்கிரஸ் கட்சிக்கு திரும்பிய பா.ஜ.க. தலைவர்
- பாஜகவில் இணைந்த சிந்தியா தற்பொது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
- தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது.
போபால்:
மத்திய பிரதேசத்தில் கடந்த 2020ல் கமல் நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது, கட்சியின் மூத்த தலைவராக விளங்கிய ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 20க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இந்த மோதலின் உச்சகட்டமாக தங்கள் பதவிகளை ராஜினாமா செய்த அவர்கள், பாஜகவில் இணைந்தனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பாஜகவில் இணைந்த சிந்தியா தற்போது மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரியாக உள்ளார்.
இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஜோதிராதித்ய சிந்தியாவைப் பின்பற்றி பாஜகவில் இணைந்து பணியாற்றிய தலைவர்களில் ஒருவரான பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சியான காங்கிரசில் இணைந்துள்ளார். சிவபுரியில் அரசியல் செல்வாக்கு மிக்க தலைவரான பைஜ்நாத் சிங்குடன், மாவட்ட அளவிலான 15 பாஜக தலைவர்களும் காங்கிரசில் இணைந்தனர். அவர்களை மூத்த தலைவர்கள் கமல் நாத், திக்விஜய் சிங் ஆகியோர் வரவேற்றனர்.
தலைவர்கள் அதிருப்தி காரணமாக கட்சி தாவுவது சகஜம் என்றாலும், பைஜ்நாத் சிங் மீண்டும் தாய்க்கட்சிக்கு திரும்புவதை கொண்டாடும் வகையிலும், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையிலும் நடத்திய வாகன அணிவகுப்பு பேசுபொருளாக மாறியிருக்கிறது. 400 வாகனங்கள் அணிவகுக்க, தனது தொகுதியான சிவபுரியில் இருந்து 300 கிமீ தொலைவில் உள்ள போபாலுக்கு சென்று காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து கட்சியில் இணைந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பைஜ்நாத் சிங், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக தீவிரமாக களப்பணியில் ஈடுபட்டு வந்தார். ஆனால், சீட் கிடைக்கும் என எந்த நம்பிக்கையும் ஏற்படாததால் மீண்டும் காங்கிரசில் சேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.