- புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
- இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் உத்தரகன்னடா மாவட்டம் கார்வார் என்ற பகுதியில் ஆற்றின் குறுக்கே கடந்த 1983-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் வழியாக கோவா செல்லும் வாகனங்கள் சென்று வந்தது. இந்த நிலையில் பாலம் பழமையானதால் கடந்த 2009-ம் ஆண்டு இந்த பாலத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பணி சாத்தியப்படவில்லை. இதனால் பாலத்தின் பாதி பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டது. இதற்கிடையே இந்த பாலத்திற்கு மாற்றாக அதே பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு புதிய பாலம் கட்டப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது.
இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில் பழைய பாலம் வழியாக ஒரு லாரி ஆற்றை கடந்த போது திடீரென பாலம் இடிந்து ஆற்றில் விழுந்தது. இதில் லாரியும் ஆற்றில் கவிழ்ந்தது. இதுப்பற்றி தெரியவந்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் லாரி டிரைவரை பத்திரமாக மீட்டனர்.
இதையடுத்து அந்த பகுதியில் உள்ள புதிய பாலத்திலும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கார்வார்-கோவா இடையே போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் இடிந்து விழுந்த பாலத்தை பார்க்க பொதுமக்கள் அதிகளவில் வந்து கொண்டு இருந்தனர்.
இதனால் முன்எச்சரிக்கையாக ஆற்றுபகுதிக்கு பொதுமக்கள் வருவதை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இரவு நேரத்தில் இந்த பாலம் இடிந்து விழுந்ததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதுப்பற்றி தெரியவந்ததும் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.