மத்திய பிரதேச பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு
- மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் மேம்பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
- படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு இன்று காலை 8.40 மணிக்கு ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.
கார்கோன் மாவட்டம் டோங்கர்கான் என்ற கிராமத்தில் உள்ள ஆற்று மேம்பாலத்தில் சென்றபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடியது. கண் இமைக்கும் நேரத்தில் அந்த பஸ் பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்தது. அந்த ஆற்றில் தற்போது தண்ணீர் இல்லை. இதனால் மணற்பரப்பில் பஸ் விழுந்தது.
இதனால் பஸ்சில் இருந்தவர்கள் உயிர் பயத்தில் அலறினார்கள். விழுந்த வேகத்தில் பஸ்சின் முன்பகுதி நொறுங்கியது. இதில் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி 22 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 25-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஓடி சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்களும் அங்கு விரைந்து வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஆற்றில் தண்ணீர் இருந்தால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரித்து இருக்கும். விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு அறிவித்து உள்ளது. படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விபத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.