null
தமிழகத்துக்கு காவிரியில் 30 டி.எம்.சி. நீர் திறப்பு- டி.கே.சிவகுமார் தகவல்
- விவசாயிகளின் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது என்றார்.
- காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரு:
மாண்டியா மாவட்டத்தில் காவிரி நதியின் குறுக்கே அமைந்துள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட புறப்படுவதற்கு முன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
காவிரியில் இருந்து தினமும் 51,000 கன அடி நீர் தமிழகத்துக்கு விடுவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 30 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட்டுள்ளோம். மேலும் 10 டி.எம்.சி. தண்ணீரை விடுவிப்போம். இந்த ஆண்டில் வழங்கப்படும் தண்ணீர் தமிழகத்துக்கு வழங்கப்படும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காவிரி நதிப்படுகையில் உள்ள 1,657 ஏரிகளையும் நிரப்பிக்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிட வேளாண் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான விதைப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக 5.90 லட்சம் குவிண்டால் விதை, 27 லட்சம் டன் ரசாயன உரம், 30 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 25,000 கோடி கடனுதவியை விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம். விவசாயிகளின் நலனில் மாநில அரசு அக்கறை கொண்டுள்ளது என்றார்.
பின்னர், கிருஷ்ண ராஜசாகர் அணையைப் பார்வையிட்ட பிறகு அவர் கூறியதாவது:-
'ஜூலை 11 முதல் 31-ந் தேதி வரையில் தமிழகத்துக்கு 20 டி.எம்.சி. தண்ணீரை விடுவிக்கும்படி காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு வழிகாட்டுதல் வழங்கியிருந்தது. அப்போது விவசாயிகளுக்கு போதுமான நீர் இல்லாததால், தமிழகத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.
இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம். கர்நாடகத்தில் நல்லமழை பெய்து வருகிறது. வாரணாசியில் கங்கை ஆரத்தி எடுப்பது போல, காவிரி ஆரத்தி எடுப்பது குறித்து யோசித்து வருகிறோம். இதை இம்மாதத்திலேயே தொடங்குவோம். இதில் இந்து அறநிலையத் துறை, நீர்ப்பாசனத் துறை கூட்டாக ஈடுபடும்.
மேகதாது அணை திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. இதற்கு காலம்தான் பதில் அளிக்கும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகத்துக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. எனவே, அதுகுறித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.